விழுப்புரம்: “என்எல்சி நிறுவனத்துக்கு நிலத்தை வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடும், வேலை வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும்” என்று சி.வி.சண்முகம் எம்பி வலியுறுத்தினார்.
விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்பி தலைமையில், என்எல்சி பிரச்னை குறித்து ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடலூர் மாவட்ட செயலாளர்கள் அருண்மொழிதேவன், பாண்டியன், திருச்சி மாவட்ட செயலாளர் முன்னாள் எம்பி குமார், எம். எல்.ஏ., அர்ஜுனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கூறியது: “கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்துக்கு நிலத்தை வழங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் என்எல்சி சார்பாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மத்திய அரசின் விதிமுறைகள் படி இன்றைய சந்தை மதிப்பில் நிலத்துக்கான இழப்பீடும், வீட்டுக்கு ஒருவருக்கு வேலையும் கேட்டு, அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். ஏற்கெனவே சுரங்கம் 1, 2 ஆகியவற்றுக்கு கைப்பற்றப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை. தற்போது மூன்றாவது சுரங்கத்திற்கு நிலம் கையகப்படுத்த அறிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் நிலத்தை வழங்கிய மக்களை வஞ்சித்து வருகிறது. என்எல்சி நிர்வாகத்தில் தற்போது கூட 300 பொறியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதில் ஒருவருக்கு கூட தமிழகத்தைச் சேர்ந்தவர்க்கு வேலை வழங்கவில்லை. இதுகுறித்து தமிழக திமுக அரசும், எம்பிக்களும் நாடாளுமன்றத்தில் பேசி உரிமையை பெற்றுத் தரவில்லை. என்எல்சி நிறுவனத்துக்கு நிலத்தை வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடும், வேலை வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும்.
நிலம் வழங்கியவருக்கு நீர்நிலை இடங்களை வழங்கி, அதனைப் பயன்படுத்த முடியாமல் மோசடியான வேலைகளை செய்துள்ளனர். இந்தப் பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு குழு அமைத்து தீர்வு காணப்படும் என தெரிவித்தனர். ஆனால் செயல்படுத்தவில்லை. தமிழக முதல்வர் உடனடியாக அதற்கான குழுவை அமைத்து தீர்வு காண வேண்டும். என்எல்சி நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் எங்களிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அவர்கள் கோரிக்கை நிறைவேற்ற அதிமுக போராடும். என்எல்சி சுரங்கங்களுக்காக நிலத்தை வழங்கிய மக்களுக்கு உரிய இழப்பீடு தொகை தரவில்லை.
கடந்த 2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு வேலை வாய்ப்பு வழங்கவில்லை. தமிழகத்தின் வளங்களைப் பயன்படுத்தும் என்எல்சி நிர்வாகம் அங்கே நிலம் வழங்கிய மக்களுக்கான உரிமையைப் பறித்தது” என்றார்.
மாநில அரசு அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகளை கண்டு பயப்படுவதாக அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, ”தலைமைச் செயலாளர் பயப்படுவதாக கூறுகிறாரா? அதனால்தான் முதல்வர் பம்மிக்கொண்டு உள்ளாரா? நடிகை நயன்தாராவுக்கு குழந்தை முறையாக பிறந்ததா என்பதே அரசுக்கு கவலை. குண்டு வெடித்ததா இல்லையா என்பது பற்றி அரசுக்கு கவலை இல்லை” என்றார்.