ஏலகிரி: சுற்றுலாத்தலமான ஏலகிரி மலையில் உள்ள மூலிகை பண்ணையில் குறைந்த விலைக்கு விற்கப்படும் 300 வகையான செடிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்று சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. இதனால் ஏழைகளின் ஊட்டியாக ஏலகிரி மலை விளங்கி வருகிறது. ஏலகிரி மலை நான்கு பக்கமும் அடர்ந்த மலைகளால் சூழப்பட்டு இதன் மத்தியில் 14 சிறிய கிராமங்களை உள்ளடக்கி தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது.
இது சுற்றுலாத்தலமாக விளங்குவதால் பல மாநிலங்களில் இருந்தும், பல மாவட்டங்களில் இருந்தும், மற்றும் வெளிநாடுகளில் இருந்தும், இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர். ஏலகிரி மலையில் முக்கிய சுற்றுலா தலங்களான படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, பறவைகள் சரணாலயம், சாகச விளையாட்டுகள், செல்பி பார்க், மூலிகைப்பண்ணை, பழப்பண்ணை, சுவாமிமலை-மலையேற்றம், முருகன் கோயில், தொலைநோக்கி இல்லம், கதவ நாச்சியம்மன் கோயில், மங்கலம் தாமரைக்குளம் ஆகியவை சுற்றுலா பயணிகளும் பார்வை இல்லமாக அமைந்துள்ளது.
மேலும், படகு இல்லத்திற்கு செல்லும் வழியில் மூலிகைப்பண்ணை அமைந்துள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட பல வகையான மூலிகைச் செடிகள் உள்ளன. இங்கு பலவித நோய்களுக்கு மூலிகை செடிகள் வளர்க்கப்பட்டு குறைந்த கட்டணத்தில் விற்கப்படுகிறது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மூலிகை செடிகளை ஆர்வத்தோடு வாங்கி செல்கின்றனர்.
மூலிகை பயன்கள் அறிய ஏற்பாடு
மூலிகை பண்ணையில் அந்தந்த மூலிகைகளின் பயன்களை அனைவரும் அறியும் வகையில் விளக்கங்கள் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்சுலின் மூலிகை செடியானது சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது. பிரண்டை மூலிகை செடியானது பசியை தூண்டும், ஆஸ்துமா, மூட்டு வலி மற்றும் சர்க்கரை நோய்களை குணப்படுத்தும். ஆவாரம் பூ மூலிகை கண் நோய்கள் மஞ்சள் காமாலை, சிறுநீர் கோளாறுகளை கட்டுப்படுத்தும். திப்பிலி மூலிகையானது ஆஸ்துமா, சுவாசக் கோளாறு, காய்ச்சல், வாத நோய்களை குணப்படுத்துகிறது.
எலுமிச்சைப்புல் மூலிகை உயர் ரத்த அழுத்தம், அஜீரணக் கோளாறு மற்றும் வாயு பிரச்சனையை சரி செய்கிறது என்பது உள்ளிட்ட விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பூச்செடிகள், பழ வகை செடிகள், நறுமண வாசம் தரும் செடிகள், மலைத்தேன், காய்கறி விதைகள், மற்றும் நறுமணப்பொருட்கள் இங்கு குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன.