திருச்சி: “தமிழகத்தில் எதிர்கட்சியான அதிமுக பிளவுப்பட்டுக் கிடக்கிறது. அந்த இடத்தை பாஜகவினர் பிடிக்க வேண்டும் என்பதற்காக அவர்களை ஒன்றுசேரவிடாமல் பார்த்துக்கொள்கின்றனர்” என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
திருச்சியில் திமுகவினருக்கான கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், “தமிழகத்தில் எதிர்கட்சியான அதிமுக இன்றைக்கு பிளவுப்பட்டுக் கிடக்கிறது. நான் நீ என்ற போட்டியில் அவர்கள் பிளவுப்பட்டுக் கிடக்கின்றனர். கடந்த காலங்களில் அதிமுக உடனான போட்டி என்பது அண்ணன், தம்பி போட்டி. அதிமுகவை பாஜக இரண்டு, மூன்றாக பிரித்துவைத்துள்ளது. வருகின்ற தேர்தலில் தேவையான இடங்களைப் பெறுவதற்காக இவ்வாறு பிரித்து வைத்துள்ளனர்.
அதிமுகவின் இடத்தை பாஜக பிடிக்க வேண்டும் என்பதற்காக அவர்களை ஒன்றுசேரவிடாமல் செய்து, பாஜகவினர் வருகின்ற நிலை இருந்துகொண்டிருக்கிறது. இதனால், நாடாளுமன்றத் தேர்தலில் 10 இடங்களில் வெற்றி பெற்று விடுவோம், அதன்பிறகு சட்டமன்றத் தேர்தலில் பார்த்துக் கொள்கிறோம் என்று அவர்கள் சவால்விடும் நிலைமை உள்ளது.
இங்கிருக்கும் அதிகாரிகள் எல்லாம் மத்திய அரசுக்கு பயப்படுகின்றனர். அப்படிதான் நிலைமை இருந்து கொண்டுள்ளது. எனவே திமுகவினர் உறுதியேற்க வேண்டும். மீண்டும் தலைவரின் கரத்தை பலப்படுத்த வேண்டும். இப்போது பலமாக இருப்பதைப் போலவே தொடர்ந்து பலமாக இருக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை மீண்டும் 40க்கு 40 இடங்களிலும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று அவர் பேசினார்.