சென்னை: கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழையும் எனவும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று (அக்.31) கனமழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர்களில் மாலையில் தொடங்கி கனமழை பெய்து வந்தது. இரவுநேரத்தில் தொடர்ந்து ஒருமணிநேரத்துக்கு கனமழை விடாது பெய்தது. கனமழையின் காரணமாக சாலையின் ஆங்காங்கே நீர் தேங்கியிருப்பதால் நடந்து பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், நாளை (1.11.22) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்ததை அடுத்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.