கெவாடியா: குஜராத்தில் நலத்திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, ‘மோர்வி கேபிள் பாலம் விபத்தால் கடும் துயரத்தில் உள்ளேன்’ என தழுதழுத்த குரலில் உருக்கமாக பேசினார். விரைவில் தேர்தல் நடக்க உள்ள குஜராத் மாநிலத்திற்கு பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சென்றுள்ளார். தனது பயணத்தின் 2வது நாளான நேற்று, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, கெவாடியாவில் படேல் சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின், மோர்பி கேபிள் பாலம் விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பனஸ்கந்தா பகுதியில் ரூ. 8,000 கோடியில் நலத்திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர், ‘‘மோர்பியில் கேபிள் பாலம் அறுந்து பொதுமக்கள் பலர் பலியாகி உள்ளனர். அந்த சம்பவத்தால் நான் மிகவும் துயரம் அடைந்துள்ளேன்.
வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைக்கலாமா வேண்டாமா என்றும் கூட குழப்பமடைந்தேன். ஆனாலும், உங்களின் அன்பும் சேவையும் கடமை செய்யும் வலிமையான இதயத்துடன் என்னை இங்கு கொண்டு வந்துள்ளது’’ என தழுதழுத்த குரலில் பேசினார். முன்னதாக, படேல் சிலைக்கு மரியாதை செய்து பேசிய மோடி, ‘‘கடந்த காலங்களை போல இந்தியாவின் வளர்ச்சியால் விரக்தியடைந்த சக்திகள் இன்றும் உள்ளன. அவர்கள் நம்மை உடைக்கவும், பிரிக்கவும் முயற்சி செய்கிறார்கள். சாதியின் பெயரால் நம்மை எதிர்த்து போராட முற்படுகின்றனர். சாதி, பிராந்தியம் மற்றும் மொழிகளால் பிரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு மொழியை இன்னொரு மொழிக்கு எதிரியாக்கும் பிரசாரங்கள் நடத்தப்படுகின்றன’’என்றார்.