குஜராத் தொங்கும் பாலம் விபத்துக்கு காரணம் ஊழலா?: காங்கிரஸ் கட்சி கேள்வி

டெல்லி : குஜராத் மோர்பி மாவட்டத்தில் தொங்கு பாலம் விபத்தில் 142 பேர் உயிரிழப்பிற்கு கட்டுமான பணிகளில் செய்யப்பட்ட ஊழல் காரணமா என்று காங்கிரஸ் கட்சி கேள்விகள் எழுப்பியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில் 2016-ம் ஆண்டு கொல்கத்தாவில் சாலை மேம்பாலம் இடிந்து விழுந்து பலர் உயிரிழந்ததற்கு மம்தா பானர்ஜி அரசு மீது  பிரதமர் மோடி குறை கூறியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது மோர்பியில் ஏற்பட்டிருக்கும் பால விபத்து கடவுளின் செயலா அல்லது மோசடி செயலா? என்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று  திக்விஜய சிங் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் கட்ச் மாவட்டத்தில் உள்ள பித்ரா கிராமத்தில் முதல் நாள் சோதனையின் போதே நர்மதா கால்வாய் உடைந்து விழுந்து இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விரைவில் குஜராத்தில் தேர்தல் வர இருக்கும் நிலையில் மக்களை கவருவதற்காக தான் இந்த பாலம் திறக்கப்பட்டதா என்று திக்விஜய சிங் கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொரு காங்கிரஸ் தலைவரான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா மனித பிழையால் ஏற்பட்டிருக்கும் சோகத்திற்கு குஜராத் பாஜக அரசு தான் நேரடி குற்றவாளி என்று விமர்சனம் செய்துள்ளார். பழுதுநீக்கப்பட்ட அக்டோபர் 26-ம் தேதி திறக்கப்பட்ட பாலம் 5 நாட்களிலேயே எப்படி இடிந்தது என்று குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலை அவர் வினவியுள்ளார்.

தகுதிச்சான்று இல்லாமல் பாலத்தை மக்கள் பயன்படுத்த பாஜக அரசு எப்படி அனுமதி வழங்கியது என்று சுர்ஜேவாலா கேள்வி எழுப்பி இருக்கிறார். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பு வாக்குகளை பெறுவதற்காக பாலம் அவசர அவசரமாக திறக்கப்பட்டதா? பாலத்தை சரிசெய்யும் ஒப்பந்தம் பணி எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது, கட்டுமான நிறுவனத்துடன் பாஜகவிற்கு தொடர்பு இருக்கிறதா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை சுர்ஜேவாலா தனது ட்விட்டர் பக்கத்தில் பட்டியலிட்டுள்ளார். பால விபத்திற்கு முதலமைச்சர் பூபேந்திர படேல் மற்றும் உள்ளூர் அமைச்சர்கள் எப்போது பொறுப்பேற்கப் போகிறார்கள் என்று கேட்டிருக்கும் சுர்ஜேவாலா குஜராத் உங்களை மன்னிக்காது என்று குறிப்பிட்டுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.