அகமதாபாத்: குஜராத் மாநிலம் மோர்பி நகரில் கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நிகழ்விடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை பார்வையிடுகிறார். இதனை குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
પ્રધાનમંત્રીશ્રી આવતીકાલે ૧ તારીખે બપોર પછી મોરબીની મુલાકાત લેશે.
— CMO Gujarat (@CMOGuj) October 31, 2022
முன்னதாக இன்று காலை கேவடியாவில் சர்தார் வல்லபபாய் படேலின் 147-வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார். அந்த நிகழ்ச்சியை ஒட்டிப் பேசிய அவர், “என் வாழ்நாளில் இத்தகைய ஒரு துயரத்தை தான் எப்போதும் கடந்ததில்லை. ஒருபுறம் என் இதயம் வலியில் கனக்கிறது. இன்னொரு புறம் கடமையின் பாதை என்னை அழைக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். குஜராத் அரசு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நேற்று விபத்து நடந்தது முதல் குஜராத் அரசு மீட்பு, நிவாரணப் பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகிறது. மத்திய அரசும் மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு அதிக அக்கறையுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீட்பு, நிவாரனப் பணிகளில் சிறு தொய்வும் இருக்காது என்று நான் உறுதியளிக்கிறேன். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைத்து மாநில அரசு அமைத்துள்ளது.
நான் இங்கு ஏக்தா நகரில் நின்று கொண்டிருந்தாலும் கூட என் மனம் முழுவதும் மோர்பி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் இருக்கிறது” என்று கூறியிருந்தார். குஜராத்திலேயே இருந்து கொண்டு பிரதமர் இன்னும் ஏன் சம்பவ இடத்திற்குச் செல்லவில்லை என்று பேச்சுக்கள் எழுந்த நிலையில் பிரதமர் மோடி நாளை நிகழ்விடத்தில் பார்வையிடுகிறார்.
அரசியல் செய்ய விரும்பவில்லை… – மோர்பி நகர் பாலம் விபத்து குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், “விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். புனரமைப்பு பணிகள் முடிந்து மீண்டும் திறக்கப்பட்ட 5,6 நாட்களுக்குள் தொங்கு பாலம் எவ்வாறு சீர்குலைந்தது என்பது குறித்து ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் நிவாரணங்களும் வழங்கப்பட வேண்டும்.
காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குஜராத் சென்றுள்ளார். நாங்கள் இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்யவில்லை. இதுகுறித்து யார் மீதும் குற்றம் சுமத்தவில்லை” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.