குஜராத் மோர்பி நகர் கேபிள் பாலம் விபத்து: 10 குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

அகமதாபாத்: குஜராத்தின் மோர்பி நகர் கேபிள் பாலம் அறுந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

குஜராத்தின் மோர்பி நகரில் மச்சூ நதி பாய்கிறது. இந்த நதியின் குறுக்கே 233 மீட்டர் நீளம், 4.6 அடி அகலத்தில் கேபிள் நடைபாலம் அமைக்கப்பட்டிருந்தது. சுமார் 140 ஆண்டுகளுக்கு முன், மரம், கேபிள்கள் மூலம் கட்டப்பட்ட இந்தப் பாலத்தில் ரூ.2 கோடியில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த தீபாவளியன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

சுற்றுலாத் தலமான இங்கு நேற்று 500-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக பாலம் உடைந்து விழுந்ததில், அனைவரும் ஆற்றில் விழுந்தனர்.

100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: அதிகாலை நிலவரப்படி மொத்தம் 177 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்றும் குஜராத் தகவல் தொடர்புத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், 19 பேர் இதில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் தீயணைப்புப் படை ஆகியவை தொடர்ந்து தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

இறந்தவர்களில் பலர் குழந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள். இதுவரை 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடி, ‘உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், ‘உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.