கோவையில் கார் வெடிப்பு என்ஐஏ விசாரணை துவங்கியது; 6 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டம்

கோவை: கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையில் என்ஐஏ அதிகாரிகள் முகாமிட்டு விசாரணையை துவக்கி உள்ளனர். கைதாகி சிறையில் உள்ள 6 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். கோவை உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கடந்த 23ம் தேதி காரில் சிலிண்டர் வெடித்ததில் வியாபாரி ஜமேஷா முபின் (29) பலியானார். இது தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்குப்பதிந்து, ஜமேஷா முபின் வீட்டில் சோதனை நடத்தி 75 கிலோ வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் சதித்திட்டம் தீட்டியதாக அவரது கூட்டாளிகள் முகமது அசாருதீன்(25), முகமது தல்கர் (25), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (28), முகமது நவாஸ் இஸ்மாயில் (26), அப்சர்கான் ஆகிய 6 பேரை உபா பிரிவில் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இதில் அப்சர்கான் தவிர 5 பேரிடம் கடந்த 26ம் தேதி முதல் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே இந்த வழக்கு விசாரணை என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டது.

வழக்கு தொடர்பான ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகளிடம் தனிப் படை போலீசார் நேற்று முன்தினம் ஒப்படைத்தனர். என்ஐஏ டிஐஜி வந்தனா தலைமையில் எஸ்பி ஸ்ரீஜித் மேற்பார்வையில் இந்த விசாரணை நடக்கிறது. விசாரணை அதிகாரியாக என்ஐஏ இன்ஸ்பெக்டர் விக்னேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். கோவையில் என்ஐஏ அலுவலகம் இல்லாததால், கோவை அவிநாசி ரோட்டில் உள்ள போலீஸ் பயிற்சி மைதானத்தில் 2 அறைகள் ஒதுக்கப்பட்டு என்ஐஏ அலுவலகம் துவக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணைக்கு உதவியாக கோவை மாநகரில் இருந்து 2 இன்ஸ்பெக்டர்கள், 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 8 போலீசார் வழங்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த தனிப்படையில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் கோவையில் கைதான 6 பேரின் வீடுகள் உட்பட பலரது வீடுகளில் என்ஐஏ சோதனை செய்ய உள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கையாக ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ள 6 பேரையும் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.