சென்னை: கோவை கார் சிலிண்டர் வெடிப்புஎதிரொலியாக முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்புபணிகளைத் தீவிரப்படுத்தியுள்ள சென்னை போலீஸார், சாலையோரம் கேட்பாரற்ற நிலையில் நிறுத்தப்பட்டிருந்த 1,027 வாகனங்களைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை உக்கடம் பகுதியில் கடந்த 23-ம் தேதி கார் சிலிண்டர் வெடிப்பு நிகழ்ந்தது. இந்தசம்பவம் தமிழகத்தில் பெரும்அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 6 பேர்கைது செய்யப்பட்டுள்ள நிலையில், என்ஐஏ விசாரணை மேற்கொண்டுள்ளது. கார் சிலிண்டர் வெடிப்பு எதிரொலியாக தமிழகம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ரோந்து பணியை முடுக்கிவிட்டுள்ள காவல் ஆணையர் சங்கர் ஜிவால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். அதன் ஒரு பகுதியாக சாலையோரம் கேட்பாரற்ற நிலையில்நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் குறித்து விசாரிக்கவும், தேவைப்பட்டால் பறிமுதல் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, சென்னை பெருநகரில் சாலைகள், தெருக்கள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் இதர இடங்களில் நீண்ட நாட்களாகக் கேட்பாரற்ற நிலையிலிருந்த வாகனங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து காவல்நிலைய சட்டம், ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீஸார் இணைந்து கேட்பாரற்ற மற்றும்உரிமை கோராத வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். அந்த வகையில் சாலையோரங்களில், வாகன நிறுத்துமிடங்களில் நீண்ட நாட்கள் நிறுத்தியிருந்த உரிமை கோராதமற்றும் கேட்பாரற்று கிடந்த 1,027 வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.