இலங்கையில் சமீப காலமாக சட்டவிரோத மதுபான உற்பத்தி 300 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், மதுபானங்கள் ஒதுக்குப்புற அல்லது புதர் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படாமல், இவை சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்ட மதுபான ஆலைகளுக்குள்ளேயே தயாரிக்கப்படுவதாகவும், நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
பண்டைய கால கிராம மக்கள் சட்ட ரீதியற்ற மதுபானங்களை (கசிப்பு) புதர்காடுகளில் தயாரித்தார்கள். தற்காலத்தில் சட்ட ரீதியான உரிமத்துடன் கழுத்துப்பட்டி அணிந்த தொழில் முனைவோர் சட்டவிரோத மதுபானங்களை உற்பத்தி செய்வதாக, கடந்த வெள்ளிக்கிழமை (28) அன்று, இலங்கை கலால் உத்தியோகத்தர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் உலக சுகாதார அமைப்பின் (WHO) அண்மைய அறிக்கையின் படி, சட்டவிரோத மதுபான உற்பத்திகள் 300 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
WHO அறிக்கையின்படி, 2004 முதல் 2016 வரையான காலப்பகுதியில், இலங்கையின் சட்டவிரோத மதுபான தொழில்துறை 95 வீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளதுடன் நாட்டின் உண்மையான மதுபான தொழில் துறையானது 50 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.