புதுடில்லி :”சமூக வலைதளங்களில் வெளியாகும் பொய் செய்திகளை முன்னெச்சரிக்கையுடன் அந்நிறுவனங்கள் கையாண்டால், நம்பகமான தேர்தல் முடிவுகள் வெளியாக உதவிகரமாக இருக்கும்,” என, தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் நேற்று தெரிவித்தார்.
புதுடில்லியில் நேற்று நடந்த தேர்தல் மேலாண்மை அமைப்புகளுக்கான சர்வதேச மாநாட்டில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் பேசியதாவது:
சமூக வலைதளங்களில் வெளியாகும் உள்ளடக்கங்களை காட்சிப்படுத்துவதில் கொள்கைகளை பின்பற்றுவதாக சமூக ஊடக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. ‘அல்காரிதம்’ எனப்படும், எந்தெந்த பதிவுகள் எவ்வளவு பேரை சென்றடைய வேண்டும் என்பதை கட்டுப்படுத்தும் அதிகாரமும் அவர்களிடம் உள்ளது. எனவே, பொய் செய்திகளை அவர்கள் முன்கூட்டியே தடை செய்ய வேண்டும் அல்லது எச்சரிக்க வேண்டும் என தேர்தல் அமைப்புகள் எதிர்பார்ப்பதில் எந்த தவறும் இல்லை.
பொய் செய்திகளுக்கு எதிரான இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நம்பகத்தன்மையுடன் கூடிய நியாயமான தேர்தல் முடிவுகள் வெளிவர உதவும்.
இதை, சமூக வலைதள நிறுவனங்கள் மனதில் வைத்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement