நாட்டில் ‘கூடுதல் வட்டி தருகிறோம்; உங்கள் முதலீட்டை இரண்டே ஆண்டுகளில் இரட்டிப்பாக்கி தருகிறோம்; ஈமு கோழியில் லாபம் எக்கச்சக்கமாக கொட்டும்; இறால் பண்ணை அமைத்து சம்பாதியுங்கள்’ என்ற ரீதியில் பல ‘டுபாக்கூர்’ நிறுவனங்கள் மக்களின் சேமிப்பை சுரண்டி வருகின்றன.
எத்தனை நிறுவனங்களில், எத்தனை லட்சங்களை பறி கொடுத்தாலும், திரும்பத் திரும்ப ஏமாறுவது மக்களுக்கு வாடிக்கையாக உள்ளது. காவல்துறை விடுக்கும் எச்சரிக்கைகளை காது கொடுத்து கேட்பதுமில்லை; பொருட்படுத்துவதுமில்லை.
இந்த ‘டுபாக்கூர்’ நிறுவனங்கள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனவோ, அதே போல, நாட்டின் நிர்வாக இயந்திரத்தை தேர்ந்தெடுக்கவென்று அமைக்கப்பட்ட தேர்தல் ஆணையமும், மக்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கி, அரசியல் கட்சிகளுக்கு வெண்சாமரம் வீசிக் கொண்டிருக்கிறது.
இலவசங்கள் என்ற தலைப்பில் நிறைவேற்ற இயலாதவற்றை, தேர்தல் வாக்குறுதிகள் என்ற தலைப்பில் கொடுப்பது அரசியல் கட்சிகளின் வாடிக்கை. ‘மூன்று படி அரிசி; இல்லையேல் முச்சந்தியில் சவுக்கடி’ என்ற தேர்தல் வாக்குறுதியில் 1967ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலின் போது துவங்கியது இந்த ‘டுபாக்கூர்’ வேலை.
இது படிப்படியாக வளர்ந்து, 2 ஏக்கர் நிலம், கறவை மாடுகள், ஆடுகள், வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, லேப் டாப், மிக்சி, கிரைண்டர், டேபிள் பேன், சைக்கிள் இன்னபிற பொருட்களை தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வழங்குவதாக, அரசியல் கட்சிகள் ஒவ்வொரு தேர்தலின் போதும் சொல்வதை வாடிக்கையாக்கி வைத்திருக்கின்றன.
இது தவிர, வாக்காளர்களுக்கு ஓட்டளிக்க ரொக்கம், பரிசுப் பொருட்கள், குடம், மூக்குத்தி, கொலுசு, அரிசி, மளிகை சாமான்கள் என்றும் வேறு ஆசை காட்டுகின்றன.
இந்த இலவச பொருட்களை எப்படி கொடுப்பர்; அதற்கு ஏது நிதி? என்றெல்லாம் சிந்திக்கும் மன நிலை வாக்காளர்களுக்கு இல்லை.
இந்த இலவச பொருட்களை வழங்குவதாக வாக்குறுதிகள் வழங்கத் துவங்கிய காலத்தில் இருந்து, மக்கள் எப்போதும் போல வறுமையில் தான் உழன்று கொண்டிருக்கின்றனர்.
ஆனால், அரசியல்வாதிகளில் பொருளாதாரம் மட்டும் ரிசர்வ் வங்கிக்கே கடன் வழங்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
நாடு விடுதலை அடைந்த நாள் முதலாக, 1990 வரை நாட்டு மக்களுக்கு, நாட்டில் சட்டசபை, லோக்சபா தேர்தல்களை பொறுப்பேற்று நடத்தும் தேர்தல் ஆணையம் எங்குள்ளது என்பதும் தெரியாது.
அதன் தலைமை தேர்தல் ஆணையர் யார் என்பதும் தெரியாது. அவர் கறுப்பா, சிவப்பா என்பதும் தெரியாது.
திருநெல்லை நாராயண அய்யர் சேஷன் 12-.12.-90 அன்று இந்திய தேர்தல் ஆணையராக பதவியேற்ற பின் தான், தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்கள் என்ன என்று ஒவ்வொன்றாக அரசியல் கட்சிகளுக்கும், நாட்டு மக்களுக்கும் தெரிய துவங்கின.
அதுவரை தேர்தல் ஆணையர்களாக பதவியில் இருந்தவர்கள், மத்திய அரசு தங்களுக்கு அளித்த பரிசு என்ற விசுவாசத்தோடு நடந்து கொண்டிருந்தனரே தவிர, அந்த ஆணையத்தின் உண்மையான அதிகாரங்களை குறித்து கிஞ்சிற்றும் பொருட்படுத்தவில்லை.
டி.என்.சேஷன் அதிரடியால், இது என்னடா வம்பா போச்சு என்று மிரண்ட மத்திய அரசு, அந்த தேர்தல் ஆணையரின் அதிகாரங்களை குறைக்கும் பொருட்டு, முதலில் ஒரு இணை தேர்தல் ஆணையரை நியமித்தது; பிறகு அதை இரண்டாகவும் ஆக்கியது.
அதாவது ஒரு ஆணையர் நிர்வகித்து கொண்டிருந்த நிர்வாகத்தை, மூன்றாக பிரித்து கொடுத்து வேடிக்கை காட்டியது.
தேர்தல் வாக்குறுதிகள் வழங்குவதை தடுக்க முடியுமா, இலவசங்கள் என்று ஆசை காட்டி மோசம் செய்யும் அரசியல் கட்சிகளின் அடாவடியை தடுக்க முடியுமா என்றால், அதை தடுக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று தேர்தல் ஆணையமும், உச்ச நீதிமன்றமும் கைவிரித்து விட்டன.
‘தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் தொடர்பான அறிவிப்புகளை முறைப்படுத்துவதற்கு, தேர்தல் ஆணையத்துக்கு எவ்விதமான சட்ட அதிகாரமும் இல்லை’ என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இலவசங்கள் தொடர்பான விவகாரம் ஜனநாயக செயல்பாட்டின் ஒரு பகுதி. அந்த இலவசங்களை ஏற்பது, ஏற்காமல் இருப்பது வாக்காளர்களின் ஞானம் மற்றும் பகுத்தறிவைச் சார்ந்தது.
இதில் தலையிடுவதற்கோ, அதை முறைப்படுத்துவதற்கோ, தேர்தல் ஆணையம், அரசு, நீதிமன்றம் ஆகியவற்றுக்கு எந்த சட்ட அதிகாரமும் இல்லை.
எனவே, தேர்தல் ஆணையம் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ், ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் சுட்டி காட்டியுள்ளார்.
அதாவது இலவசங்களை காட்டி ஏமாற்றி வாக்குகளை பெற்று ஆட்சியில் அமர்வது தான் ஜனநாயகம் என்று தெள்ளத் தெளிவாக, தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமல்ல; உச்ச நீதிமன்றத்துக்கும் சேர்த்து பாடம் நடத்தி இருக்கிறது காங்கிரஸ் கட்சி.
மக்கள் முட்டாள்களாக இருக்க வேண்டும் என்று தானே ஒவ்வொரு அரசியல் கட்சியும் எதிர்பார்க்கின்றன.
சிந்திக்கும் திறனும் பகுத்தறிவும் வந்து விட்டால், இன்றைக்கு ஆட்சியில் அமர்ந்து இருக்கும் அரசியல் கட்சிகள் ஏதாவது ஒன்றாவது பதவியில் இருக்குமா?
நாம் இந்த கட்டுரையின் முன் பகுதியில் சுட்டிக்காட்டிய டுபாக்கூர் நிதி நிறுவனங்களுக்கும், நியாயமான தேர்தலை நடத்த முடியாத தேர்தல் ஆணையத்துக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா? இரண்டும் ஒன்றுதானே?
ஒன்று மக்களின் சேமிப்பை சுரண்டுகிறது.
மற்றொன்று நாட்டு மக்களின் எதிர்காலத்தை, நாட்டு முன்னேற்றத்தை தடுக்கிறது.
இதற்கு ஒரு முடிவே கிடையாதா?
காலங்காலமாய் மக்கள் ஏமாந்து கொண்டு தான் இருக்க வேண்டுமா?
தேர்தல் ஆணையத்தால்
l கல்வியறிவு இல்லாதவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க முடியாது
l குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க முடியாது
l வாக்காளர் சிறையில் இருந்தால் ஓட்டளிக்க முடியாது. ஆனால், வேட்பாளர் சிறையில் இருந்து தேர்தலிலும் போட்டியிடலாம்; ஓட்டும் அளிக்கலாம்
l மூன்றாண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்கள் தான் போட்டியிட முடியாது. இரண்டு ஆண்டுகள் 11 மாதங்கள் வரை தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் தாராளமாக போட்டியிடலாம்
l பணப்பட்டுவாடாவை தவிர்க்கவும் முடியாது; தடுக்கவும் இயலாது
l அடிதடி, வெட்டு குத்து, வன்முறை, தீவைப்பு சம்பவங்களை தடுக்க முடியாது.
l பூத்தை கைப்பற்றுவதை தடுக்க முடியாது.
l இறந்தவர்கள் உயிர்தெழுந்து வந்து ஓட்டளிப்பதையும், கள்ள ஓட்டுகள் போடுவதையும் தடுக்க முடியாது.
தேர்தல் ஆணையத்தால் இந்த முறைகேடுகள் எதையும் தடுக்க முடியவில்லை.
நியாயமான முறையில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் இல்லாமல், எந்தவிதமான முறைகேடுகளும் இல்லாமல், மேலே சுட்டிக்காட்டியுள்ள குறைகள் எதுவும் இல்லாமல் தேர்தலை நடத்தி முடிக்க பின் வருமாறு ஆலோசனை கூறுகிறோம்.
தேர்தல் வேண்டாம்
தேர்தல் தேதி, மனுதாக்கல், பரிசீலனை, வாபஸ், இறுதி வேட்பாளர் பட்டியல், சின்னம் ஒதுக்கல், அரசியல்வாதிகள் வேட்புமனு தாக்கல் செய்ய நுாற்றுக்கணக்கான கார்களும், ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்களும் புடைசூழ வந்திருந்து மிரள வைப்பது போன்ற எந்த ஏடாகூடமும் இல்லாமல் தேர்தலை நடத்தலாம்.
ஓட்டளிக்க வேண்டாம்
பிரசாரம், ஊர்வலம், பொதுக்கூட்டம், ஓட்டுப்பதிவு, ஓட்டுப் பெட்டிகளுக்கு பாதுகாப்பு, ஓட்டு எண்ணிக்கை போன்ற எந்த கண்றாவிகளும் வேண்டாம்.
ஊர் பஞ்சாயத்துகளில் தலைவர் பதவிகளை ஏலம் விடுவது போல, வார்டு கவுன்சிலர் முதல் லோக்சபா உறுப்பினர்கள் வரையுள்ள பதவிகளை ஏலம் விட்டு, கூடுதல் தொகைக்கு ஏலம் கேட்பவர்களுக்கு கொடுத்து விடலாம்.
ஆனால், இந்த ஏல நிகழ்ச்சி, பார்லிமென்ட் தேர்தலுக்கென்றால், நாட்டிலுள்ள 543 தொகுதிகளுக்கும் பல்வேறு இடங்களில், ஒரே நாளில் ஒரே நேரத்திலும், சட்டசபை தேர்தல் என்றால் தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களிலும் ஏலம் விடலாம்.
அதிக தொகைக்கு ஏலம் கேட்பவர் வெற்றி பெற்ற வேட்பாளராக அறிவிக்கப் படுவார்.
சரி. இப்படி மக்கள் பிரதிநிதிகள் பதவிகளை தேர்தல் இல்லாமல், ஏலம் மூலம் நடத்துவதால் என்ன பயன் என்று கேட்கலாம்.
பயன்கள் வருமாறு:-
1அரசியல் கட்சிகள் கூட்டணி வைத்து மக்களை முட்டாளாக்குவது முற்றிலும் தடுக்கப்படும்.
2ஜாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்துவது ஒரு முடிவுக்கு வரும்.
3ரிசர்வ் தொகுதிகள் நீடிக்கும். அந்த தொகுதிகளுக்கு நடக்கும் ஏலத்தில், ஏலம் கேட்கும் ஏலதாரரின் ஏலத்தொகையை அரசியல் கட்சியே கட்டும்.
4ஏலம் நடந்து முடிந்து, ஏலத்தில் வெற்றி பெற்றவர் யார் என்று அறிவித்த பிறகே எந்தெந்த அரசியல் கட்சி எத்தனை எத்தனை தொகுதிகளை கைப்பற்றி உள்ளது என்பது தெரியவரும்.
5அரசாங்க பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் ‘சிண்டிகேட்’ அமைத்து, குறைந்த தொகையில் டெண்டரை கைப்பற்றுவது போல, அரசியல் கட்சிகள் ஏலம் நடக்கும் முன், சிண்டிகேட் அமைத்தால் அந்த ஏலம் ரத்து செய்யப்படும்.
அப்படி சிண்டிகேட் அமைத்த அரசியல் கட்சிகள் தகுதி இழந்ததாக அறிவிக்கப்பட்டு வெளியேற்றப்படும்.
6வார்டு கவுன்சிலர் முதல் பார்லிமென்ட் உறுப்பினர் வரை, ஒவ்வொரு தொகுதிக்கும் உச்சபட்ச வரம்பு நிர்ணயிக்கப்படும். அந்த உச்சபட்ச வரம்பை கடந்து ஏலம் எடுக்கலாம்.
உச்சபட்ட வரம்பு வரை ஏலத் தொகை கேட்கப்படவில்லையெனில் மறு தேதி குறிப்பிட்டு ஏலம் நடத்தப்படும். அப்போது உச்சபட்ச வரம்பு தொகையோடு கூடுதலாக 10 சதவீதத் தொகை சேர்க்கப்படும்.
7இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் மொத்த தொகையும் அரசு கருவூலத்துக்கு வந்து சேரும்.
8அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் தேர்தல் செலவினத்தில், 90 சதவீதம் வரை மிச்சமாகும்.
9தேர்தலை முன்னிட்டு நடக்கும் வன்முறைகள், கொலைகள்அனைத்தும் முற்றிலும் தவிர்க்கப்படும்.
10அரசும் தேர்தல் ஆணையமும் இந்த ஆலோசனைகளை ஏற்க முன் வந்தால், நாட்டில் அரசியல் கட்சிகளின் அட்டகாசம் அறவே ஒழியும்.
வாக்குறுதி என்ற பெயரில், வாக்காளர்களை ஏமாற்றுவதும் தடுக்கப்படும். கூட்டணி என்ற போர்வையை போர்த்திக் கொண்டு நடைபெறும் பகல் கொள்ளைகளும் ஒழியும்.
11மக்களின் ஓட்டுரிமை பறிபோகிறதே என்று அங்கலாய்க்கலாம். இதுவரை பறிபோகாமல் ஓட்டளித்து வந்ததற்கு சாமானியன் என்ன பயனை கண்டு விட்டான், ஏமாந்ததை தவிர.
12அதிகாரமற்ற ஆணையமாக இயங்கிக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம் முழு அதிகாரமுள்ள அமைப்பாக இயங்கத் துவங்கும்.
அரசு ஆலோசிக்குமா?
தேர்தல் வாக்குறுதிகள் வழங்குவதை தடுக்க முடியுமா, இலவசங்கள் என்று ஆசை காட்டி மோசம் செய்யும் அரசியல் கட்சிகளின் அடாவடியை தடுக்க முடியுமா என்றால், அதை தடுக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று தேர்தல் ஆணையமும், உச்ச நீதிமன்றமும் கைவிரித்து விட்டன.
பார்லிமென்ட் தேர்தலுக்கென்றால், நாட்டிலுள்ள, 543 தொகுதிகளுக்கும் பல்வேறு இடங்களில், ஒரே நாளில் ஒரே நேரத்திலும், சட்டசபை தேர்தல் என்றால், தமிழ் நாட்டிலுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களிலும் ஏலம் விடலாம். அதிக தொகைக்கு ஏலம் கேட்பவர் வெற்றி பெற்ற வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்