சுவாதி கொலை… ராம்குமார் தற்கொலை – மீண்டும் விசாரணை; ரூ. 10 லட்சம் இழப்பீடு!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற மென் பொறியாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 2016ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டார் என தெரிவிக்கப்பட்டது.  இந்த சம்பவம் தொடர்பாக, பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு, மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அப்போதைய புழல் சிறை வார்டன் பேச்சிமுத்து ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அவரது வாக்குமூலத்தில், ராம்குமார் கம்பியை கடித்த போது லத்தியால் தள்ளி அவரை காப்பாற்ற முயற்சி செய்ததாக கூறியுள்ளார். 

இதனையடுத்து ஆணையம் இன்று (அக். 31) பிறப்பித்துள்ள உத்தரவில், “சிறையில் குறைந்த ஊழியர்கள் உள்ளதால் ராம்குமார் மரணத்திற்கு அவர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. அரசுக்கு இதில் பொறுப்பு உள்ளது. 

சிறையில் போதியளவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டியது அரசின் கடமை. ராம்குமார் மரணம் தொடர்பாக உண்மையை கண்டறிய சுதந்திரமான விசாரணை தேவை” எனக் குறிப்பிட்டுள்ளது. 

ராம்குமார் மரணத்திற்கு இழப்பீடாக அவரது தந்தைக்கு 10 லட்சம் ரூபாயை ஒரு மாத்தில் வழங்க வேண்டும்  என தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சிறையில் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனவும் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.