திருச்சி: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் இதுவரை குற்றவாளி கண்டுபிடிக்கப்படாத நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய காவல்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம், 2012 மார்ச், 29ம் தேதி, மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். திருச்சியில் இருந்து கல்லணை செல்லும் சாலையில், அவரது உடல் கம்பிகளால் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப் பட்டது.கொலை சம்பவம் தொடர்பாக, ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த கொலை சம்பவம் நடைபெற்று 10 ஆண்டுகளை கடந்த நிலையில், இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த வழக்கு திமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் உயிரிரூட்டப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து, திருச்சி பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் 12 பேர் மீது உண்மை கண்டறியும் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திண்டுக்கல் மோகன்ராம், சாமி ரவி, நரைமுடி கணேசன், சீர்காழி சத்யராஜ், மாரிமுத்து, தினேஷ், லட்சுமி நாராயணன், சண்முகம், ராஜ்குமார், சுரேந்தர், சிவகுணசேகரன், கலைவாணன் ஆகியோரிடம் சோதனை நடத்த சிறப்பு புலன் விசாரணை குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு புலன் விசாரணை குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும், திருவெறும்பூர் பழைய காவல் நிலையத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை செய்துவிட்டு, பின்னர் அவர்களை விடுவித்துள்ளனர்.
இந்த நிலையில் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் முதற்கட்டமாக, சாமி ரவி, சீர்காழி சத்யராஜ், கணேசன் உள்ளிட்ட 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவெடுத்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழு, அவர்கள் அனைவரும் வரும் செவ்வாய்க்கிழமை நேரில் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளது.