சென்னை: அடுத்த 2 மணி நேரத்திற்குள்ளாக சென்னையின் முக்கிய பகுதிகளில் மீண்டும் மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நடப்பு ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் நேற்றுமுன்தினமே தொடங்கி விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அண்மையில் வங்கக் கடலில் உருவான சித்ரங் புயலால், கடந்த வாரத்தில் துவங்க வேண்டிய வடகிழக்கு பருவமழை, சற்றே தாமதமாக தொடங்கினாலும் மழையின் தன்மையை பாதிக்காது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. நாளை முதல் வடகிழக்குப் பருவ மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனச் சொல்லப்பட்ட நிலையில் இன்று மாலை முதலே சென்னையில் கனமழையின் தீவிரம் அதிகமாக இருந்தது.
சென்னை மற்றும் அதன் புறநகர்களில் கனமழை நீண்ட நேரமாக நீடித்தது. சென்னையின் கிண்டி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், நந்தனம், கேகே நகர், ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தவெளி, அடையார், எழும்பூர், அண்ணா சாலை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் கடந்த 2 மணிநேரமாக கனமழை வெளுத்துவாங்கியது. இதனால் நகரின் முக்கிய சாலைகள் மற்றும் இடங்களில் மழைநீர் வெள்ளப்பெருக்கெடுத்தது.
இதனால், சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் உண்டாக, மக்கள் அவதிக்குள்ளாகினர். வடசென்னையின் முக்கிய இடங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இதனிடையே, அடுத்த 2 மணி நேரத்திற்குள்ளாக சென்னையின் முக்கிய பகுதிகளில் மீண்டும் மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள தகவலில், “அடுத்த 2 மணி நேரத்திற்குள்ளாக எழும்பூர், மயிலாப்பூர் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. அதேபோல், ஆலந்தூர், மதுரவாயல், பல்லாவரம், அயனாவரம், கும்மிடிப்பூண்டி, குன்றத்தூர், பெரம்பூர், பூவிருந்தவல்லி, பொன்னேரி, புரசைவாக்கம், ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம், திருவள்ளூர், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, உத்துக்கோட்டை, அம்பத்தூர், மாதவரம், பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை: நாளை (1.11.22) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்ததை அடுத்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.