சென்னை, சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் வெளியிட்டு உள்ளது. சென்னையில் அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வானிலை ஆய்வு மையம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் வரும் 4ந்தேதி வரை மழை தொடரும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. அண்ணாசாலை, திருவல்லிக்கேணி, மெரினா கடற்கரை,சேப்பாக்கம்,சாந்தோம், பட்டினப்பாக்கம், தேனாம்பேட்டை, கிண்டி, வேளச்சேரி , அடையாறு, அம்பத்தூர், கோயம்பேடு, மதுரவாய், மாதவரம், ரெட்ஹில்ஸ் உள்பட பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், பணிக்கு செல்வோர், வாகன ஓட்டிகள் கடும் துயரத்துக்கு ஆளானார்கள்.