சேலம் அருகே தனியார் ஸ்பின்னிங் மில்லில் கொத்தடிமையாக பணிபுரிந்துவந்த 35 வட மாநில பெண்கள் மீட்பு போலீசார் மீட்டு, அவர்களின் சொந்த ஊருக்கு பத்திரமாக அனுப்பிவைத்தனர்.
சேலம் மாவட்டம், சார்வாய் கிராமத்தில் அக்சென் டெக்ஸ் என்ற தனியார் ஸ்பின்னிங் மில் ஒன்று இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் ராமசாமி, உள்ளூர் பணியாளர்கள் மட்டுமின்றி வெளி மாநிலத்தில் இருந்தும் ஆட்டக்கலை கொண்டு வந்து பணியில் அமர்த்தியுள்ளார்.
அதில், கடந்த நான்கு மாத காலமாக ஜார்கண்ட் மற்றும் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த 35 பெண்கள் விடுதியில் தங்கி தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வந்துள்ளனர்
இந்நிலையில், இந்த 35 பெண்களுக்கும் சம்பளம் வழங்காமல் கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்குவதாக, பெண்கள் பாதுகாப்பு மையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, வட்டாட்சியர், வருவாய்த் துறையினர், போலீசார் சம்பந்தப்பட்ட ஸ்பின்னிங் மில்லிற்க்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், விடுமுறை, சம்பளம் ஏதும் தராமல் அவர்களை நிர்வாகம் நடத்தியது அம்பலமானது.
இதனையடுத்து 35 பெண்களையும் வருவாய்த்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் அமைப்பினரும் மீட்டு, அவர்களின் சொந்த ஊருக்கு (ஒரிசா) அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விவகாரம் குறித்து தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.