மொகதிசு : சோமாலியாவில் இரு வேறு இடங்களில் நேற்று முன் தினம் நடந்த சக்திவாய்ந்த கார் குண்டு வெடிப்பில் 100 பேர் பரிதாபமாக பலியாகினர்;300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் தலைநகர் மொகதிசுவில் கல்வி அமைச்சர் அலுவலக சுற்றுச்சுவர் பகுதியில் முதல் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
மதிய உணவு வேளையின்போது ஒரு உணவகம் முன்பாக இரண்டாவது குண்டுவெடிப்பு நடந்தது. இப்படி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கார் குண்டுகள் வெடித்ததால் 100 பேர் உயிரிழந்தனர்; 300க்கும் அதிகமானோர் பலத்த காயமடைந்தனர். இவர்களில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.
இச்சம்பவத்தின்போது பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்குவதற்கான நடவடிக்கை குறித்து நாட்டின் ஜனாதிபதி பிரதமர் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் சோமாலியா ஜனாதிபதி ஹசன் ஷேக் மொஹமுத் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்ததாவது:
கடந்த 2017ல் லாரியில் வைக்கப்பட்ட குண்டு வெடித்து 500 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டதற்குப் பின் இது தான் மிக மோசமான தாக்குதல். இதற்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இருப்பினும் அல் குவைதா அமைப்புடன் தொடர்புடைய அல் ஷஹாப் என்ற பயங்கரவாத அமைப்பு இச்செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும். அல் ஷஹாப் பயங்கரவாதிகளுடனான எங்களது போர் இப்போதும் தொடர்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement