ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் மாறுபாடு அடைந்த வைரஸ் பாதிப்பு, இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிகம் பரவி இருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று, மூன்று அலைகளாக பரவி நாடு முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி, ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட காரணங்களால், கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. இன்னனும் நாட்டில் கொரோனா தொற்று முடிவுக்கு வரவில்லை.
இந்நிலையில், இந்தியாவில் தமிழகம் உட்பட 9 மாநிலங்களில் ஒமைக்ரானின் மாறுபாடு அடைந்த எக்ஸ்பிபி (XBB) வைரஸ் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சர்வதேச ஆராய்ச்சி அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது. வைரசின் உருமாற்றங்களை கண்காணித்து வரும் ‘கிசியாத்’ (GISIAD) என்ற சர்வதேச ஆராய்ச்சி அமைப்பு, ஒமைக்ரானின் மாறுபாடு அடைந்த எக்ஸ்பிபி வைரஸ் பற்றி அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அதன்படி, இந்தியாவில் தமிழகம் உட்பட 9 மாநிலங்களில் எக்ஸ்பிபி வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 175 பேர், மேற்கு வங்கத்தில் 103 பேர் என நாடு முழுவதும் 380 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் புதுச்சேரி, ஒடிசா, மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் இந்த வகை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஏற்கனவே, கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமான சீனாவில், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து, அங்கு பல நகரங்களில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே, தமிழகம் உட்பட பல மாநிலங்களில், ஒமைக்ரானின் மாறுபாடு அடைந்த வைரஸ் தொற்று பரவி வருவது, மீண்டும் கட்டுப்பாடுகள் அமலாகுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.