தமிழ் சினிமா பாடலாசிரியர்களில் நா. முத்துக்குமார் எப்போதும் ஸ்பெஷல். அவரது வரிகள் அலங்காரமின்றி, அகங்காரமின்றி எளிமையாக இருந்ததால் பலதரப்பினரையும் சென்று சேர்ந்தன. இதனால் நா. முத்துக்குமாரை இளைஞர் முதல் பெரியவர்வரை அனைவரும் ரசித்தனர். தொடர்ச்சியாக பத்து வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் அதிக பாடல்களை எழுதிய பாடலாசிரியர்களில் முதலிடத்தில் அவர் இருந்தார். பெரிய இயக்குநர், சின்ன இயக்குநர் என வேறுபாடு பார்க்காமல் அனைவருக்கும் ஒரேமாதிரியான மொழியை கொடுத்தார்.
அதுமட்டுமின்றி தங்கமீன்கள், சைவம் என தொடர்ச்சியாக 2013 மற்றும் 2014ஆம் வருடங்களில் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை தொடர்ச்சியாக பெற்றார். சமீபத்தில்கூட தமிழ்நாடு அரசின் 3 விருதுகளை பெற்றார். அதனை அவரது குழந்தைகளான ஆதவனும், மகாலட்சுமியும் பெற்றுக்கொண்டனர்.
இந்தச் சூழலில் இயக்குநரும், நா. முத்துக்குமாரின் உற்ற நண்பருமான வசந்தபாலன் அநீதி என்ற படத்தை இயக்கிவருகிறார். இதில் துஷாரா விஜயன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். படம் ஆரம்பித்தபோது நா. முத்துக்குமாரின் கவிதைகளை தொகுத்து ஒரு பாடலாக உருவாக்கப்படுமென்று அவர் அறிவித்திருந்தார்.
பாடலை ஜிவி பிரகாஷும், யாமினியும் பாடியிருக்கிறார்கள். பக்கா மெலோடியாக உருவாகியிருக்கும் இந்தப் பாடல் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. மேலும் இந்தப் பாடலை கேட்ட பலரும், நா. முத்துக்குமார் மீண்டும் வந்திருக்கிறார் என சிலாகித்து அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.