தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவில் நேற்று சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது. கடற்கரையில் சூரபத்மனை சுவாமிஜெயந்திநாதர் வதம் செய்தார். லட்சக்கணக்கான பக்தர்கள் விண்ணதிர ‘அரோகரா’ முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா, கடந்த 25-ம் தேதி யாகசாலைபூஜையுடன் தொடங்கியது. தினமும் யாகசாலையில் சுவாமிக்குசிறப்பு அபிஷேகம், தீபாராதனையுடன் பூஜை நடைபெற்றது.
விழாவின் 6-ம் நாளான நேற்று, சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் இதர கால பூஜைகள்நடைபெற்றன. பின்னர் யாகசாலைபூஜைகள் தொடங்கின. பின்னர், யாகசாலையில் இருந்து சுவாமிவெள்ளிச் சப்பரத்தில் எழுந்தருளி சண்முகவிலாசம் மண்டபம் வந்தடைந்தார். தொடர்ந்து மாலை 3.50 மணியளவில் சூரபத்மனை வதம் செய்வதற்காக, சுவாமி ஜெயந்திநாதர் போர்க்கோலம் பூண்டு சஷ்டி மண்டபத்தில் இருந்து புறப்பட்டார். 4 மணியளவில் கடற்கரைக்கு வந்தார். முதலில் கஜ முகத்துடனும், அடுத்து சிங்க முகத்துடனும், பின்னர் சுயரூபத்துடனும் போரிட வந்த சூரபத்மனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்தார். பின்னர் மாமரமாக உருமாறி நின்ற சூரபத்மனை சேவலாகவும், மயிலாகவும் மாற்றி சுவாமி ஆட்கொண்டார்.
அப்போது, கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், ‘‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’’ என்று விண்ணதிர முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். பின்னர் கடலில் புனித நீராடி சஷ்டி விரதத்தை நிறைவு செய்தனர். சூரசம்ஹாரம் முடிந்ததும் வள்ளி, தெய்வானை சமேதராக சுவாமி ஜெயந்திநாதர் சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை நடைபெற்றது. கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் பங்கேற்பின்றி சூரசம்ஹார விழாநடைபெற்றது. 2 ஆண்டுகளுக்குபிறகு பக்தர்கள் கலந்துகொண்டதால், கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. விழாவின் 7-ம் நாளான இன்று (அக்.31) சுவாமி – அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.