சியோல்: தென் கொரியாவின் சியோல் மாவட்டத்தில், ‘ஹாலோவின்’ திருவிழா கொண்டாட்டத்தின் போது, குறுகிய சாலையில் நெரிசலால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், 150 இளைஞர்கள் மிதிபட்டு உயிரிழந்தனர்.
அகால மரணமடைந்து பேயாக திரியும் முன்னோர்களை சந்தோஷப்படுத்தும் வகையில், அக்., 31ம் தேதியை ‘ஹாலோவின்’ திருவிழாவாக அமெரிக்கா உட்பட பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில், மற்றவர்களை பயமுறுத்தும் வகையில் மக்கள் முகத்தில் திகிலாக வர்ணம் பூசியும், முகமூடி அணிந்தும் கொண்டாட்டங்களில் ஈடுபடுவர்.
கிழக்காசிய நாடான தென் கொரியாவின் சியோல் மாவட்டம் இடாேவான் நகரில், ஹாலோவின் திருவிழா நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா பரவல் காரணமாக இந்த விழா நடத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இவை சமீபத்தில் நீக்கப்பட்டன. இதையடுத்து, இடாேவான் நகரில் ஹாலோவின் திருவிழாவில் அதிக அளவில் இளைஞர்கள் பங்கேற்றனர்.
மிகவும் குறுகிய சாலைகள் உள்ள பகுதியில் நடந்த இந்த திருவிழாவில், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வெளியேற வழியில்லாமல் ஒருவர் மீது ஒருவர் விழுந்து, தப்பிக்க மக்கள் முயற்சித்தனர்.
இதில், கீழே விழுந்தவர்கள் மிதிபட்டு உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில், 150 இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக இடாேவான் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதைத் தவிர, 82 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 19 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
தென் கொரிய வரலாற்றில் மிகவும் மோசமான விபத்தாக இது கருதப்படுகிறது. கடந்த 2005ல் சாங்ஜூ நகரில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், 11 பேர் உயிரிழந்தனர்; 60 பேர் காயமடைந்தனர்.
கடந்த 1960ல் சியோல் நகரில் ரயில்வே நடைபாலம் இடிந்து விழுந்ததில், கூட்ட நெரிசலில் சிக்கி, 31 பேர் உயிரிழந்தனர்.
இடாேவானில் நடந்த ஹாலோவின் திருவிழா விபத்துக்கு, அந்த நாட்டின் அதிபர் யூன் சுக் இயோல் கடும் அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக, ‘டிவி’ வாயிலாக நாட்டு மக்களிடையே அவர் உரையாற்றினார். உயிரிழந்தோர் நினைவாக தேசிய அளவில் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்றும், தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் அறிவித்தார்.
மேலும், சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று அவர் பார்வையிட்டு, மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டார்.
இந்த தள்ளுமுள்ளு சம்பவம் எப்படி நேர்ந்தது என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. அந்த நகரின் பல சாலைகள் முழுதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்திருந்தது. ஒரு பக்கத்தில் இந்த தள்ளுமுள்ளு நடந்த நேரத்தில், மற்றொரு பக்கத்தில் அது தெரியாமல் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதற்கிடையே காணாமல் போன தங்களுடைய உறவினர்களை தேடி அந்த நகர மக்கள் மருத்துவமனைகளுக்கும், சவக் கிடங்குகளுக்கும் படையெடுத்தனர். இந்த சம்பவம், அந்த நகரம் மட்டுமல்லாமல் தென் கொரியா முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்துக்கு, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அதிர்ச்சியை தெரிவித்துள்ளார். ‘இந்த இக்கட்டான நேரத்தில் தென் கொரியாவுக்கு ஆதரவாக இருப்போம்’ என, தான் விடுத்துள்ள அறிக்கையில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
தொடரும் சோகம்…
1990 ஜூலை 2: சவுதி அரேபியாவின் மெக்காவில் புனித யாத்திரை நெரிசலில் 1426 பேர் பலி. பெரும்பாலானோர் மலேசியா, பாக்., இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர்கள்.
2005 ஜன,25: – மஹாராஷ்டிராவின் மந்த்ரா தேவி கோவில் நெரிசலில் 340 பேர் பலி.
ஆக. 31: ஈராக்கின் பாக்தாத் நகரில் விழா நெரிசலில் 1005 பேர் பலி.
2008 செப். 30: ராஜஸ்தானின் ஜோத்பூரில் சாமுண்டா தேவி கோவில் நெரிசலில் 220 பேர் பலி.
2010 நவ. 22: கம்போடியாவில் தண்ணீர் திருவிழா நெரிசலில் 375 பேர் பலி.
2011 ஜன. 14: கேரளாவின் சபரிமலை கோவில் நெரிசலில் 102 பேர் பலி.
2013 ஜன. 28 : பிரேசிலின் சான்டா மரியாவில் நைட்கிளப் நெரிசலில் 230 பேர் பலி.
2015 செப். 24: மெக்காவில் புனித யாத்திரை நெரிசலில் 717 பேர் பலி.
2022 அக். 1: இந்தோனேஷியாவின் மலாங் நகரில் வன்முறை, நெரிசலில் 135 பேர் பலி.
2022 அக். 30: தென்கொரியாவின் சியோல் நகரில் ஹாலோவீன் திருவிழா நெரிசலில் 150 பேர் பலி.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்