குஜராத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு தொங்கு பாலம் இடிந்து விழுந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் திகைக்க வைத்தது. இந்தபெரும் விபத்துக்குப் பிறகு நூற்றுக்கணக்கான மக்கள் ஆற்றில் விழுந்தனர். குஜராத்தில் மோர்பி கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130 என்ற எண்ணிக்கையை தாண்டியுள்ளது.இந்திய இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவை குஜராத்தில் NDRF உடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சுமார் 100 பேர் இன்னும் காணவில்லை. மேலும், 177 க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.
மோர்பி தொங்கு பாலம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6:40 மணியளவில் இடிந்து விழுந்ததில் நூற்றுக்கணக்கான மக்கள் தண்ணீரில் விழுந்தனர். இடிந்து விழுந்த நேரத்தில், குஜராத் பாலத்தில் 500க்கும் மேற்பட்டோர் இருந்ததாகவும், அவர்களில் பெரும்பாலோர் சத் பூஜை சடங்குகளுக்காகவும், விழாக்களைப் பார்க்கவும் அங்கு கூடி இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பாலம் இடிந்து விழுந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொங்கு பாலங்கள் ஆபத்தானதா?
குஜராத்தின் மோர்பியில் உள்ள கேபிள் பாலம் ஒரு தொங்கு பாலமாக இருந்தது. தொங்கு பாலங்கள் வழக்கமாக கேபிள்கள் மூலம் இணைக்கப்படுகின்றன, சில சமயங்களில், பயணிகள் போக்குவரத்துக்கான தொங்கு பாலங்களுக்கு உறுதியான அடித்தளம் இருக்காது.
தொங்கு பாலத்தின் வளைந்து கொடுக்கும் தன்மையானது, அதிக சுமைகளைக் கையாள்வதில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். குஜராத்தில் உள்ள மோர்பி பாலம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் இருந்ததால் இடிந்து விழுந்தது. அதிக சுமை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது என்று ஊகிக்கப்படுகிறது.
மோர்பி கேபிள் பாலம் இடிந்தது ஏன்?
நீர் நிலைகளில் மேற்கொள்ளப்படும் சத் பூஜையைக் கொண்டாட 400 முதல் 500 பேர் மோர்பி பாலத்தில் கூடி இருந்தனர். இந்நிலையில், அதிக மக்கள் மற்றும் அதிக சுமை காரணமாக பாலம் இடிந்து விழுந்ததாக ஊகிக்கப்படுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
குஜராத்தின் மோர்பியில் உள்ள தொங்கு பாலம் பழுது மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்டது. இதற்கு முறையான சோதனைகள் செய்யப்படவில்லை என்றும், பொதுமக்களுக்காக பாலத்தை மீண்டும் திறப்பதற்கு முன், அரசு அங்கீகாரம் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மேலும், பாலத்தை வேண்டுமென்றே அசைத்து ஆடிக்கொண்டிருந்த பல இளைஞர்களை பார்த்ததாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இது குறித்து மேலும் கூறுகையில், பாலத்தின் பாதி வரை வந்தபோது, அங்கிருந்த இளைஞர்கள் சிலர் வேண்டுமென்றே, பாலத்தை பலமாக ஆட்டினர். அந்த செயல் எங்களுக்கு ஆபத்து விளைவிக்கும் என்று தோன்றியதால், நாங்கள் பாலத்தை கடக்காமல், மீண்டும் திரும்பிவிட்டோம் என தெரிவித்தனர். சில மணிநேரங்களுக்குப் பிறகு அது இடிந்து விழுந்ததாகவும் விபத்து நடந்த இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர். சிலர், அரசின் அலட்சியம் மற்றும் சத் பூஜைக்கான சரியான ஏற்பாடுகள் இல்லாததால், இறுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் பாலத்தில் திரண்டனர் என்று குற்றம் சாட்டுகின்றனர்.