நகருக்குள் வாகன நெருக்கடியை தவிர்க்க பல அடுக்கு மல்டி லெவல் கார் பார்க்கிங் வேண்டும்: ராமேஸ்வரம் பொதுமக்கள் வலியுறுத்தல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் நகருக்குள் வாகன நெருக்கடியை தவிர்க்க கோயில் வாகன நிறுத்தப்பகுதியில் பல அடுக்குடன் மல்டி லெவல் கார் பார்க்கிங் வளாகம் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தேசிய சுற்றுலா தலமாகவும் இந்துக்களின் புண்ணிய ஸ்தலமாகவும் இன்றளவும் ராமேஸ்வரம் விளங்கி வருகிறது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் இங்கு வருகின்றனர். பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் ராமேஸ்வரத்திற்கு அதிகளவில் வருகிறது.

ராமேஸ்வரம் நகருக்குள் வழக்கமாக ஓடும் உள்ளூர் வாகனங்களுடன் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் ஓடுவதால் ராமேஸ்வரம் வாகன நெருக்கடியினால் திணறுகிறது. ராமேஸ்வரம் நகரில் மட்டும் ஆயிரத்திற்கும் குறையாத இருசக்கர வாகனங்கள், கார், வேன், ஆட்டோ உள்ளிட்ட மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் நாள்தோறும் இங்குள்ள சாலைகளில் ஓடுகிறது. இந்நிலையில் வெளியூர்களில் இருந்து நாள்தோறும் வரும் நூற்றுக்கணக்கான வாகனங்களும் நகருக்குள் ஓடுகிறது. மேலும் சாலையோரங்களில் இந்த வாகனங்கள் நீண்டநேரம் நிறுத்தப்படுகிறது.

இதனால் இங்குள்ள அனைத்து சாலைகளிலும் இருசக்கர வாகனம், அரசு பேருந்து உட்பட அனைத்து ரக வாகனங்களும் செல்ல முடியாமல் வாகன நெரிசலில் சிக்கி போக்குவரத்து தடை ஏற்படுகிறது. இதனால் வாகனத்தில் பயணம் செய்வோர் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்ல தாமதம் உட்பட பல்வேறு இடையூறுகளை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.
ராமேஸ்வரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான தங்கும் விடுதிகளில் சிலவற்றில் மட்டுமே வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளது. மற்ற விடுதிகளில் தங்கும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது.

இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்தும் நடக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை ராமேஸ்வரத்திற்கு வரும் வெளியூர் வாகனங்கள் எண்ணிக்கை இன்று பலமடங்கு அதிகரித்துள்ளது. இதுபோல் உள்ளூர் வாசிகளின் வாகனங்களும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. நகருக்குள் அமைந்துள்ள சாலைகளையும் விரிவாக்கம் செய்யமுடியாத நிலையில் ராமேஸ்வரம் வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்துவதற்கு போதிய வசதிகள் இன்று வரை உருவாக்கப்படாமல் உள்ளது. ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி சுவாமி கோயிலுக்கு சொந்தமான 11 ஏக்கர் பரப்புள்ள பசுப்பட்டி இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு பல லட்சம் லட்சம் ரூபாய் செலவில் வாகன நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது.

கோயிலுக்கு அருகாமையில் இந்த இடம் இருப்பதால் கோயில் திருவிழாக்கள், கோடைகால விடுமுறை போன்ற சீசனில் இங்கு 400 வாகனங்கள் வரை நிறுத்தும் வசதி உள்ளது. ஆனால் போதுமான அடிப்படை வசதிகள் பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இல்லாததால் இங்கு அதிகளவில் வாகனங்கள் நிறுத்தப்படுவதில்லை. இதன் அருகிலேயே ஈஸ்வரி அம்மன் கோயில் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான வாகன நிறுத்துமிடம் உள்ளது. இங்கு ஐம்பதுக்கும் குறைவான வாகனங்கள் மட்டுமே நிறுத்த முடியும். ராமேஸ்வரத்திற்கு அன்றாடம் வந்து செல்லும் வாகனங்களுக்கு இதுபோதாது.

இதனால் கோயில் வாகன நிறுத்துமிடத்தில் பல அடுக்குகள் கொண்ட மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். கோயில் வாகன நிறுத்துமிடம் அமைந்துள்ள 11 ஏக்கர் இடத்தில் சில ஏக்கர் பரப்பளவில் மட்டுமே சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இந்த நிலத்தில் வெற்றிடம் அதிகளவில் உள்ளது. இந்த இடத்தில் இரண்டு அல்லது மூன்று தளங்களுடன் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைத்தால் குறைந்தது மூன்றாயிரம் வாகனங்கள் நிறுத்த முடியும். மீதம் உள்ள இடத்தில் தங்கும் விடுதியும் ஏற்படுத்தலாம்.

ராமேஸ்வரம் நகர் பகுதிக்குள் கோயிலை மையப்படுத்தி அனைத்து தங்கும் விடுதிகளும் அமைந்துள்ளது. மேலும் ராமநாத சுவாமி கோயில், அக்னி தீர்த்தம் கடற்கரையும் இதன் அருகில் உள்ளது. இந்த இடத்தில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைத்தால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு மிகவும் வசதியாக இருப்பதுடன், சுற்றுலா வாகனங்கள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும் ஏதுவாக இருக்கும். ராமநாத சுவாமி கோயிலுக்கு பக்தர்களால் வழங்கப்படும் காணிக்கை, உண்டியல் வசூல், பல வகை கட்டணம், வாடகை, குத்தகை என பலவழிகளில் ஆண்டு தோறும் கோடிக்கணக்கில் வருவாய் வருகிறது.

பக்தர்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை மல்டி லெவல் கார் பார்க்கிங் திட்டத்தை செயல்படுத்த கோயில் நிர்வாகமும், அறநிலையத்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் இத்திட்டத்தை செயல்படுத்திட அரசுக்கு பரிந்துரை செய்யவேண்டும் என்று பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.