சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.
இதுதொடர்பாக, சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குஜராத் மாநிலத்தில் மோர்பி தொங்கு பாலம் விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கலையும், பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். பிரேசில் நாட்டின் அதிபராக லூலா மீண்டும் தேர்வு செய்யப்பட்டதற்கு பாராட்டுகள்.
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின் கொள்கைகளால் நாடு பல நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளது. பொருளாதாரம் நிலை குலைந்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. உலகில் பசியால் வாடும் மக்கள் அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் நேபாளம், இலங்கை நாடுகளுக்கு கீழே இந்தியா உள்ளது. பாஜக, ஆர்எஸ்எஸ் கொள்கைகளால் சட்டத்தின் மதச்சார்பற்ற தன்மை, மக்கள் நல அரசு, கூட்டாட்சி தத்துவம் ஆகியவை தகர்க்கப்பட்டுள்ளன.
பாஜகவை அதிகாரத்தில் இருந்து மாற்ற வேண்டும். இதற்கு மாநிலக் கட்சிகள், மதச்சார்பற்ற கட்சிகள், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்டவை ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
கோவை சம்பவம் கண்டிக்கத்தக்கது. அதன் உண்மை என்ன என்பதை என்ஐஏ விசாரிக்கிறது. உண்மைகள் வெளிவர வேண்டும். ஆனால், இதைக் காரணம் காட்டி மாநில அரசை எதிர்ப்பதையும், இழிவுபடுத்துவதையும் ஏற்க முடியாது. மாநில அரசு தனது அதிகாரத்துக்கு உட்பட்டதை செய்துள்ளது. இந்தியாவில் ஆளுநர் நியமனங்கள் சமீப காலமாக அரசியல் நியமனங்களாக அமைகின்றன. ஆளுநர் பொறுப்பில் இருந்து விலகிவிட்டு எங்கேயாவது ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து கொண்டு எதை வேண்டுமானாலும் பேசட்டும். கோவை சம்பவத்தை சனாதன நிலையில் இருந்து முன்வைப்பது சரியாக இருக்காது.
தமிழகத்தில் திமுக தலைமையில் உள்ள மதச்சார்பற்ற ஜனநாயக அணி மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது. ஜனநாயக, மதச்சார்பற்ற கட்சிகள், இடதுசாரி கட்சிகள் ஒன்றுபடுகின்றபோது பாஜக போன்ற வலதுசாரி பிற்போக்கு தன்மைகளைக் கொண்ட கட்சியை முறியடிக்க முடியும் என்பதைக் காட்டி இருக்கிறது. இதேபோன்று மற்ற மாநிலங்களிலும் மதச்சார்பற்ற அணி உருவாக்கப்பட வேண்டும்.
அகில இந்திய அளவில் செயல்படுகிற ஒரு மதச்சார்பற்ற கட்சியாக காங்கிரஸ் உள்ளது. தமிழகம், பிஹார் போன்ற அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.