சென்னை: நாளை (நவ.1) நடைபெறும் கிராமசபை கூட்டத்தில், வேளாண் துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கப்பட உள்ளன. இதில் அனைத்து விவசாயிகளும் பங்கேற்று பயனடைய வேண்டும் என்று வேளாண்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக வேளாண் துறை செயலர் சி.சமயமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆண்டுதோறும் நவ.1-ம்தேதி உள்ளாட்சிகளின் தினமாக கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். வரும் நவ.1-ம் தேதி (நாளை)உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, கிராமசபை கூட்டங்கள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
விவசாயிகளின் நலனுக்காக தமிழக அரசு, கடந்த 2 ஆண்டுகளாக வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்து, பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. கிராமங்களில் ஒட்டுமொத்த வளர்ச்சியை உருவாக்கும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், மானாவாரி வேளாண்மையில் அதிக வருமானம் பெறுவதற்கு முதல்வரின் மானாவாரி நில மேம்பாட்டுத் திட்டம், முதல்வரின் ஊட்டச்சத்து காய்கறித் தோட்டம், தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி பரப்பை உயர்த்தும் திட்டம், துறையின் இயந்திரங்களை எளிதாக பயன்படுத்துவதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இ-வாடகை செயலி, சூரியசக்தியால் இயங்கும் பம்ப்செட் நிறுவும் திட்டம், விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெற உழவர் சந்தைகளை வலுப்படுத்தும் திட்டம், சிறு, குறு விவசாயிகளை ஒன்றிணைத்து வேளாண் பணிகளை வணிகரீதியாக மேற்கொள்ளஉழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி, வேளாண்மையில் தொழில்முனைவோரை உருவாக்குதல் எனபல்வேறு நலத்திட்டங்களை வேளாண் துறை செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நவ.1-ம்தேதி நடத்தப்படும் கிராமசபை கூட்டத்தில் வேளாண் துறை சார்பில் ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் ஒரு பொறுப்பு அலுவலர்நியமிக்கப்பட்டு, துறையின் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்படும். முக்கிய தொழில்நுட்பங்கள், அரசின் திட்டங்கள் குறித்த விவரங்களை விளக்கும் வகையில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்படும். துண்டுப் பிரசுரங்களும் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும். நடப்பு ஆண்டில் பல்வேறு திட்டங்களில் பயனடைந்த விவசாயிகளின் விவரம் கிராமவாரியாக தயாரிக்கப்பட்டு அக்.2-ம் தேதிநடந்த கிராமசபை கூட்டத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதற்கு பிறகு, வேளாண் துறையின் திட்டங்களால் பயனடைந்த விவசாயிகளின் விவரம், நவ.1-ம் தேதி நடக்கும் கிராமசபை கூட்டத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். எனவே, இக்கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பங்கேற்று பயனடைய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.