நாளை நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பங்கேற்குமாறு தமிழக அரசு அழைப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் நாளை (நவம்பர் 1ந்தேதி) நடைபெறும்   கிராம சபைக் கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பங்கேற்குமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் முதன்முறையாக இந்த ஆண்டு, நவம்பர் 1ந்தேதி கிராமசபை, நகரசபை, மாநகர சபை கூட்டங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி,  தமிழக வேளாண் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்வர், சட்டமன்ற பேரவை விதி எண் 110ன் கீழ் ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சிகளின் தினமாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்தார். அதன்படி, எதிர்வரும் நவம்பர் 1 ஆம் தேதியன்று, உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என அரசு அறிவித்துள்ளது வேளாண்மை- உழவர் நலத்துறையின் முக்கிய திட்டங்கள் தமிழக விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு, கடந்த இரண்டு ஆண்டுகளாக வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்து, பல்வேறு வகையான நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

கிராமங்களில் ஒட்டுமொத்த வளர்ச்சியை உருவாக்கும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், மானாவாரி வேளாண்மையில் அதிக வருமானம் பெறுவதற்கு முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு திட்டம், முதலமைச்சரின் ஊட்டச்சத்து காய்கறித் தோட்டம், தோட்டக்கலை பயிர்களின் சாகுபடிப் பரப்பை உயர்த்தும் திட்டம், வேளாண் பணிகளை காலத்தே மேற்கொள்ள வேளாண் இயந்திரமயமாக்குதல், துறையின் இயந்திரங்களை எளிதாக பயன்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இ வாடகை செயலி, சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்ப்செட் நிறுவும் திட்டம், விவசாயிகளும், பொதுமக்களும் பயன்பெற உழவர் சந்தைகளை வலுப்படுத்தும் திட்டம், சிறு, குறு விவசாயிகளை ஒன்றிணைத்து வேளாண்மைப் பணிகளை வணிகரீதியாக மேற்கொள்வதற்கு, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி, வேளாண்மையில் தொழில்முனைவோர்களை உருவாக்குதல் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை வேளாண்மை -உழவர் நலத்துறை செயல்படுத்தி வருகிறது.

கிராம சபைக்கூட்டத்தில் வேளாண்மை -உழவர் நலத் துறையின் பங்கு தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, எதிர்வரும் நவம்பர் ஒன்றாம் தேதி அன்று, அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் நடத்தப்படும் கிராம சபைக் கூட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத் துறை சார்பாக ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் ஒரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு துறையின் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்படும். மேலும், முக்கிய தொழில்நுட்பங்கள், அரசின் திட்டங்கள் குறித்த விவரங்களை விளக்கும் வகையில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்படுவதுடன் துண்டு பிரசுரங்களும் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும்.

நடப்பு ஆண்டில் பல்வேறு திட்டங்களில் பயனடைந்த விவசாயிகளின் விபரம் கிராம வாரியாக தயாரிக்கப்பட்டு அக்டோபர் இரண்டாம் தேதியன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. அக்டோபர் இரண்டாம் தேதிக்குப் பின் வேளாண் – உழவர் நலத்துறையின் திட்டங்களில் பயனடைந்த விவசாயிகளின் விபரமும், நவம்பர் ஒன்றாம் தேதியன்று நடைபெறும் கிராம சபைக்கூட்டத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.எனவே, நவம்பர் ஒன்றாம் தேதியன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் திரளாகப் பங்கேற்று பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.