நெல்லை, மேலப்பாளையம் பகுதியில் வசிப்பவர் ராமு. இவர் கணவர் முத்து என்பவர் இருசக்கர வாகன மெக்கானிக்காக இருந்தார். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த சில வருடங்களாக சிகிச்சைக்காக பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் சில மாதங்களுக்கு முன்பு முத்து உயிரிழந்துவிட்டார்.
மூன்று பெண் பிள்ளைகள், இரு மகன்களைக் கொண்ட ராமு, அனைவருக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டார். கடந்த 2003-ம் ஆண்டு அவருடைய கணவர் உயிருடன் இருந்தபோது அவர்களின் வறுமையான சூழலைக் கவனத்தில் கொண்ட மேலப்பாளையம் ஹமீம் மதரசா நிர்வாகத்தினர், முத்து குடும்பத்தினருக்கு மதரசாவுக்கு பாத்தியப்பட்ட இடத்தில் குடியிருக்க அனுமதி வழங்கினார்கள்.
மதரசா இடத்தில் வீடு கட்டி குடியிருக்க நிலத்துக்காக 100 ரூபாய் முன்பணமும் மாத வாடகையாக ரூ.5 மட்டும் வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி அந்த இடத்தில் சிறிய வீட்டைக் கட்டி குடியிருந்தநிலையில், முத்து இறந்துவிட்டார். அதன் பின்னர் கொரோனா காலத்தில் ராமு சென்னைக்குச் சென்றுவிட்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டை சிலர் உடைத்து அதில் இருந்த பொருள்களை அள்ளிச் சென்றுவிட்டதுடன், புதிய பூட்டையும் போட்டுவிட்டனர். அதனால் குடியிருக்க வீடு இல்லாமல் தவித்த அவர், இது பற்றி விசாரித்தபோது சுடலை என்பவர் வீட்டை ஆக்கிரமித்துப் பூட்டுப்போட்டு வைத்திருப்பது தெரியவந்தது. அதனால் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்திருக்கிறார்.
வீட்டை ஆக்கிரமித்த சுடலைக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்படுவதாக ராமு குற்றம்சாட்டுகிறார். அத்துடன், வீட்டை மீட்கப் போராடும் தன்னை சுடலையும் அவர் மகனும் அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. அதனால் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த ராமு, தான் கொண்டுவந்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
அவர் உடலில் பெட்ரோல் ஊற்றியதைப் பார்த்த காவல்துறையினர் உடனடியாக அவரை மீட்டு உடலில் தண்ணீர் ஊற்றிக் கழுவினார்கள். சோர்வுடன் இருந்த 60 மூதாட்டியான ராமு, கண்களில் பெட்ரோல் பட்டதால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார். உடனடியாக அங்கு பாதுகாப்புப்பணியில் இருந்த பெண் இன்ஸ்பெக்டர் மீகா மனிதாபிமானத்துடன் தன்னுடைய கைக்குட்டையால் ராமுவின் கண்களைத் துடைத்து விட்டார். தொடர்ந்து அவர் நெற்றி உள்ளிட்ட இடங்களிலும் பெட்ரோலை துடைத்துவிட்டதுடன், இனிமேல் இதுபோல நடந்துகொள்ளக் கூடாது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.