பருவ மழை தொடங்கியுள்ளதையொட்டி செம்பரம்பாக்கம் ஏரி மதகில் வண்ணம் பூசும் பணி தீவிரம்

குன்றத்தூர்: வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை குடிநீர்  ஏரி மதகில்  வண்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. பருவ மழை  தொடங்கியுள்ளதை தொடர்ந்து, தமிழகத்தில் தொடர்ந்து கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையின் முக்கிய குடிநீர்  ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிக்க  தொடங்கி உள்ளது. தொடர் மழையால் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து, ஏரி நிறைந்தால் உபரிநீர் திறப்பது வழக்கம். இந்நிலையில், கடந்த சில தினங்களாக  செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகளுக்கு வண்ணம் பூசி புதுப்பிக்கும் பணிகள்  நடந்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் ஐந்து கண் மதகுகள் மற்றும் 19  கண் மதகுகள், நீர் வெளியேற்றும் ஷட்டர்கள், மின் மோட்டார்கள், ஏரி கரையின்  சுவர்கள் ஆகியவற்றில் வண்ணம் பூசும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது.

தற்போது, வண்ணம் பூசம் பணி முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில்  செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகள் அனைத்தும் புதிதாக வண்ணம் தீட்டி  புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. மேலும் வெள்ள தடுப்பு பணிக்காக மணல்  மூட்டைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மதகுகளின்  ஷட்டர்கள் வழியாக உபரிநீர் திறந்து விடப்பட்டால் நேரடியாக அடையாறு ஆற்றில்  கலக்கும் வகையில் கால்வாய்களும் ஆங்காங்கே தூர்வாரப்பட்டு தயார் நிலையில்  உள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரம் 20.29 அடியாகவும்,  மொத்த கொள்ளளவு 2675 மில்லியன் கன அடியாகவும், சென்னை குடிநீருக்காக  தினமும் 150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து மழை  பெய்தாலும் 23 அடி வரை செம்பரம்பாக்கம் ஏரியின் அளவை வைத்து கண்காணித்து, பிறகு உபரி நீரை வெளியேற்றுவது குறித்து அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, செம்பரம்பாக்கம் ஏரி முழுவதும் புதிய  வண்ணங்கள் பூசி புதுப்பொலிவுடன் உபரி நீரை வெளியேற்றுவதற்கு தயார் நிலையில்  உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.