சேலம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும். இதில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மற்ற துறை அதிகாரிகளும் கலந்துகொள்ள, மனுதாரர்கள் அளிக்கும் மனுக்கள் விசாரித்து பரிசீலனை செய்யப்படும். அவ்வாறு மனுநாளான இன்று வழக்கம்போல மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் கூட்டம் நடைப்பெற்றது. மக்களிடம் மனுக்களை பெறுவதற்கு முன்னதாக ஒவ்வொரு துறையிலும் ஏற்கெனவே எவ்வளவு மனுக்கள் வந்திருக்கின்றன, எத்தனை மனுக்கள்மீது உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று மாவட்ட ஆட்சியர் கார்மேகம் விசாரித்து வந்தார். அப்போது சில துறை அதிகாரிகள் கொடுக்கப்படும் மனுக்களை கொஞ்சம்கூட பார்ப்பதில்லை என்று முகம் சுளித்தார். அப்போது, சேலம் ஆவின் ஜி.எம் சிக்கிக்கொண்டார். அவரை, “ஒழுங்காக அலுவலகம் வரீங்களா, இல்லையா… ஏன் இத்தனை மனுக்கள் விசாரிக்காமலேயே இருக்கின்றன” என்றார்.
மேலும், “மாவட்டக் கல்வி துறை இதுவரை பாதிக்குப் பாதி மனுவை கூட விசாரிக்கவில்லை ஏன்? உங்களிடம் படிக்கும் மாணவர்கள் இதுபோன்று மதிப்பெண் எடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா… மற்ற துறைகளைக் காட்டிலும் கல்வி துறை மிகவும் முக்கியமானது. அதனால் ஒழுங்காக செயல்பட வேண்டும்” என்று அறிவுரைக் கூறினார். இதுவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து பொதுமக்கள் அளித்த மனுக்களில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டு அனைத்து மனுக்களையும் பரீசீலனை செய்து முடித்திருப்பதாகக் கூறி வாழ்த்துகள் தெரிவித்தார். காவல்துறையை உதாரணம்காட்டி, “சட்ட ஒழுங்கு பிரச்னையை கையாளும் காவல்துறையினரே மனுக்களை சிறப்பாக விசாரணை செய்து முடித்திருக்கும்போது, மற்ற துறைகளும் அவர்களைப் போன்று சிறப்பாகச் செயல்பட வேண்டும்” என்று கூறினார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் பேசினோம். “தமிழகத்தில் மற்ற மாவட்டங்களைக் காட்டிலும், சேலம் மாவட்டம் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. மனுக்களை ஏற்று உரிய விசாரணை செய்து பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதில் சேலம் முதலிடத்தில் இருந்து வருகிறது. அதிகாரிகளிடம் மக்களின் மனுக்கள் குறித்து பேசி அவர்களை விசாரித்தால்தான் அவர்கள் இன்னும் சிறப்பாக செயல்படுவார்கள். ஆரம்பகாலக்கட்டதில் காவல்துறையில் 3,000 மனுக்கள் குவிந்திருந்தன. தற்போது, அது கொஞ்சம் கொஞ்சமாக தீர்க்கப்பட்டு, குறைந்திருக்கிறது” என்றார்.