புதுடெல்லி: பெண்ணின் அந்தரங்க உறுப்பில் இருவிரல் பரிசோதனை செய்ய தடை விதித்த உச்ச நீதிமன்றம், இதுபோன்ற பரிசோதனை செய்பவர்கள் தவறான நடத்தை குற்றவாளிகள் என அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் பெண்ணை எந்த முறையில் மருத்துவர்கள் பரிசோதிக்க வேண்டும் என ஒன்றிய அரசு தரப்பில் புதிய விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இருவிரல் சோதனை என்பது கூடாது என அதில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இருவிரல் பரிசோதனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வட மாநில வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘பாலியல் வன்முறை மருத்துவத்தில் தற்போது வரையில் இருவிரல் பரிசோதனை செய்யும் நடைமுறை உள்ளது.
பெண்ணுறுப்பில் ‘ஹைமன்’ அதாவது (கன்னித்திரை) ஜவ்வு கிழிந்துள்ளதா? இல்லையா என மருத்துவர்கள் அவர்களது இரு விரல்களை உள்ளே விட்டு பார்க்கிறார்கள்.
இதுபோன்ற சோதனை முறையானது தனியுரிமை மீறல் என்று கடந்த 2013ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’’என தெரிவித்திருந்தார். வழக்கை விசாரித்து அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு நேற்று வழங்கிய தீர்ப்பில், ‘‘இரு விரல் பரிசோதனை நடத்தக் கூடாது என முன்னதாக உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுபோன்று செய்பவர்கள் தவறான நடத்தை குற்றவாளிகள் ஆவார்கள். இதுபோன்ற சோதனைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். இதுதொடர்பான மருத்துவ சான்றிதழ்களும் தேவையான ஒன்றும் கிடையாது. இதுவொரு ஆணாதிக்க அடிப்படையில் செய்யப்படும் பரிசோதனையாகும்’’என உத்தரவிட்டுள்ளனர்.