புதுச்சேரி: “புதுச்சேரியின் அரசு மருத்துவமனைகள் உலக தரம் வாய்ந்ததாக மாற வேண்டும்” என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து மருத்துவமனையின் அனைத்து துறைத் தலைவர்கள், சிறப்பு மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்களுடன் அவர் இன்று ஆலோசனை நடத்தினார். இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய கருத்தரங்க அறையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத் துறைச் செயலர் உதயகுமார், சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமலு ஆகியோர் உடன் இருந்தார்.
அரசு பொது மருத்துவமனையில் பொதுமக்களுக்கான சிகிச்சை முறைகள் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை நடத்தினார். மருத்துவர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் அந்தந்த துறைக்கான தேவைகள், குறைபாடுகள் குறித்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது: “மருத்துவமனையைப் பார்வையிட்டபோது சில குறைபாடுகள் தெரியவந்தது. அதற்காக தலைமை மருத்துவர்கள், தலைமைச் செவிலியர்கள், மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள் ஆகியோரை அழைத்து கூட்டம் நடத்திருக்கிறோம். சில பிரச்சினைகளை தெரிவித்திருக்கிறார்கள். ஏற்கெனவே கூறியது போல அரசு மருத்துவமனையை மக்களுக்கு முழுமையான சேவை செய்யும் அளவுக்கு மேம்படுத்துவதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். நவீன ஆஞ்சியோகிராம் வாங்கப்பட்டு இருக்கிறது. இன்னும் பல விதமான முக்கிய கருவிகள் வாங்கப்பட்டிருக்கிறது. அதில் பயிற்சி பெற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் பணியமர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.
காலியாக உள்ள இடங்கள் அனைத்தும் நிரப்பப்பட வேண்டும். பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டாலும் அந்தந்த துறையில் இருந்து மக்களுக்கு முழுமையான சேவையாற்ற
என்னென்ன வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். நோயாளிகளுக்கு உயர் ரக சிகிச்சை அளிப்பதற்கான தேவைகள் குறித்து ஒரு வாரத்துக்குள் அனைத்து துறைகளும் அறிக்கை அளிப்பார்கள்.
இருதயம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஆகியவற்றை செய்யும் அளவிற்கு அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற கனவுத் திட்டத்தை சொல்லி இருக்கிறோம். வாரம் ஒரு முறை ஆய்வு செய்யப்படும். அறிக்கைகளைப் பெற்று மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தலாம்.
முதல்வரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். மருத்துவமனையை மேம்படுத்துவது குறித்து ஏற்கெனவே அவரிடம் ஆலோசனை செய்திருக்கிறேன். முழுமையாக இதில் கவனம் செலுத்தி புதுச்சேரியின் அரசு மருத்துவமனைகள் உலக தரம் வாய்ந்ததாக மாற வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்திருக்கிறேன். அதற்கான பணியை இன்று தொடங்கி இருக்கிறோம்.
சிறப்பு மருத்துவர்களை பணியமர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. நிச்சயமாக சிறப்பு மருத்துவர்கள் பணியமர்த்தப்படுவார்கள். அதன் பிறகு முழுமையாக செயல்படும். இன்னும் அதிக அளவில் மேம்படுத்தப்படும். மருந்து பற்றாக்குறை நிச்சயமாக இல்லை. அத்தியாவசிய மருந்துகள் அனைத்தும் இருக்கிறது. ஒன்று இரண்டு மருந்துகள் இல்லாமல் இருக்கலாம். அத்தியாவசியமான சிகிச்சை எதுவும் மறுக்கப்படவில்லை. உயிர் காக்கும் சிகிச்சை எதுவும் மறுக்கப்படவில்லை. அடிப்படை மருத்துவத்தில் உள்ள வசதிகளை மேம்படுத்துவதே நோக்கம்” என்று தமிழிசை கூறியுள்ளார்.