பெண்ணின் அந்தரங்க உறுப்பில் இரு விரல் பரிசோதனை செய்வோர் தவறான நடத்தை குற்றவாளிகள்!: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: பெண்ணின் அந்தரங்க உறுப்பில் இரு விரல் பரிசோதனை செய்வோர் தவறான நடத்தை குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்தரங்க உறுப்பில், இரு விரல் பரிசோதனை செய்யும் நடைமுறை உள்ளது. பெண்ணுறுப்பில் ‘ஹைமன்’ (கன்னித்திரை) என்ற சவ்வு  இருக்கும். அந்த சவ்வு கிழிந்துள்ளதா?, இல்லை… கிழியாமல் அப்படியே  இருக்கிறதா? என்று இரு விரல்களை உள்விட்டு பார்க்கிறார்கள்.

சாமானிய  மக்களில் இருந்து மருத்துவம் படித்த நிபுணர்கள் வரையிலும் இந்த நடைமுறையை  பின்பற்றுகின்றனர். இதுபோன்ற சோதனை முறையானது தனியுரிமை மீறல் என்று கடந்த 2013ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கூறியது. பல்வேறு உயர் நீதிமன்றங்களும் இந்த பரிசோதனையை நிறுத்த வேண்டும் என்றும், இரு விரல் பரிசோதனை தொடர்வதை அனுமதிக்க முடியாது என்றும், இதுபோன்ற செயல்களை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இரு விரல் பரிசோதனை முறையை எதிர்த்து மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இரு விரல் பரிசோதனை செய்வோர் கண்டறியப்பட்டால் தவறான நடத்தை குற்றவாளிகள். இதுபோன்ற சோதனைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். இதுதொடர்பான மருத்துவ சான்றிதழ்களும் தேவையான ஒன்றும் கிடையாது. இதுவொரு ஆணாதிக்க அடிப்படையில் செய்யப்படும் பரிசோதனையாகும்.

இதுவும் ஒருவிதமான பாலியல் ரீதியான துன்புறுத்தல் வகை தான். பாலியல் பலாத்கார சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள், இதுபோன்ற சோதனைகளில் உட்படுத்தப்படவில்லை என்பதை ஒன்றிய சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்த வேண்டும். தொடர்ந்து அதனை கண்காணிக்க வேண்டும். இதனை அனைத்து மாநில காவல்துறை தலைமை இயக்குனர்களுக்கும் அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும்’ என்று தீர்ப்பு அளித்துள்ளனர். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலம், இதுபோன்ற சோதனைகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.