நாகர்கோவில்: பேச்சிப்பாறை அணையில் இருந்து மறுகால் வழியாக வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் 3வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்றும் மாலை முதல் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்பட்டது. நாகர்கோவில் பகுதியில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
மாவட்டத்தில் இன்று காலை வரை அதிகபட்சமாக நாகர்கோவிலில் 19.8 மி.மீ மழை பெய்திருந்தது. மயிலாடி 12.2, ஆரல்வாய்மொழி 13 மி.மீட்டரும் பெய்திருந்தது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 42.29 அடியாக இருந்தது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 897 கன அடியாகும். நீர் திறப்பு 383 கன அடியாக இருந்த நிலையில் உபரி நீர் வெளியேற்றம் 2014 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.50 அடியாகும். நீர் வரத்து 479 கன அடியாக இருந்த நிலையில் 800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சிற்றார்-1ல் நீர்மட்டம் 12.33 அடியாகும். நீர் வரத்து 28 கன அடியாக இருந்தநிலையில் தண்ணீர் வெளியேற்றம் இல்லை. சிற்றார்-2ல் நீர்மட்டம் 12.43 அடியாகும். நீர் வரத்து 44 கன அடியாக இருந்தது. பொய்கை அணை நீர்மட்டம் 16.10 அடியாகும். நீர் வரத்தும் இல்லை, வெளியேற்றமும் இல்லை. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 38.30 அடியாகும்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேச்சிப்பாறை அணையில் இருந்து இருதினங்களுக்கு முன் 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த உபரிநீர் கோதையாறு வழியாக பாய்ந்தோடுகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேற்றும் அதே நிலை நீடித்தது. இதனால் 3வது நாளாக நேற்றும் சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. விடுமுறை நாளான நேற்று அருவியில் குளிக்கும் ஆர்வத்துடன் காலையில் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். பின்னர் அருவியில் அழகை செல்பி எடுத்து மகிழ்ந்து திரும்பினர்.