‘ப்ளூ டிக்’ குறியீடுக்கு மாதம் ரூ.1600: கட்டணம் வசூலிக்க ட்விட்டர் முடிவு..!

அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிபடுத்தும் ‘ப்ளூ டிக்’ குறியீடுக்காக பயனர்களிடம் மாதம்தோறும் ரூ.1600 வரை கட்டணம் வசூலிக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வசம் வந்த நிலையில், போலியான கணக்குகளை நீக்க அதிரடியான மாற்றங்களை கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி, ட்விட்டரின் கணக்குகளை சரிபார்க்கும் செயல்முறை புதுப்பிக்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்தார்.

ட்விட்டரில் தற்போது, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகளில் ப்ளூ டிக் பயன்படுத்துகின்றனர். இந்த ட்விட்டர் கணக்கு அவர்களுடைய அதிகாரப்பூர்வ கணக்கு தான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள, ட்விட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற டிக் குறிக்கப்பட்டிருக்கும்.

ட்விட்டர் ப்ளூ டிக்கிற்காக பயனர்கள் 4.99 அமெரிக்க டாலர்கள் (ரூ.410 வரை) செலுத்த வேண்டியிருந்தது. இதன்மூலம், பயனர்கள் ட்விட்டரில் பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். தாங்கள் பதிவிட்ட பதிவுகளை எடிட் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிபடுத்தும் ப்ளூ டிக்கிற்காக பயனாளர்களிடம் மாதம்தோறும் ரூ.1600 வரை (19.99 அமெரிக்க டாலர்) கட்டணம் வசூலிக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இந்த அறிவிப்பு வெளியான 90 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தவில்லை என்றால், பயனாளர்கள் பெயருக்கு அருகில் உள்ள ப்ளூ டிக் குறியீட்டை பறிக்கும் வகையில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.