கடலூரில் சில நாள்களுக்கு முன்பு பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, பத்திரிகையாளர்களிடம் “குரங்குகளைப் போல் ஏன் எங்கு சென்றாலும் தாவித்தாவி வருகிறீர்கள்” என்று பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி அவரை புறக்கணிக்க வேண்டுமென்று சமூக வலைதளங்களிலும் பலர் கூறினர்.
இந்நிலையில், கோவை உக்கடம் பகுதியில் கார் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த இடத்தின் அருகில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்குச் சென்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அங்கு வழிபாடு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் கடலூரில் பத்திரிகையாளர்கள் குறித்து தவறாக பேசியதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என சில பத்திரிகையாளர்கள் கேட்டனர்.
கோவை மக்களை தீவிரவாத தாக்குதலிலிருந்து காத்து அருளிய கோட்டை ஈஸ்வரனை தரிசித்து, அவரை வணங்கி அவரது கருணையை போற்றி நமது கட்சியின் மூத்த தலைவர்கள், மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளுடன் இன்று பிரார்த்தனை செய்தோம். pic.twitter.com/wAumTZuY3p
— K.Annamalai (@annamalai_k) October 31, 2022
அதற்கு அவர், “பத்திரிகையாளர்களை மரியாதையாக, நேர்மையாக, நியாயமாக 99 சதவீதம் நடத்துகின்றவன் நான். எங்களுக்கு நியாயமான கோபம், சில பத்திரிகையாளர்கள் மீது இருக்கிறது. அவர்கள் தவறான செய்திகளை பதிவிடுவதுதான் அதற்கு காரணம். எனவே, நான் மன்னிப்புக் கேட்க மாட்டேன். ன் எப்போதும் தவறு செய்யவில்லை.
மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது. என் ரத்தத்தில் அது கிடையாது. தவறு செய்யாதபோது நான் எதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும். அதன்பிறகு, எனது செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொள்வதும், கலந்துகொள்ளாமல் இருப்பதும் உங்கள் விருப்பம். ன் தவறிழைக்காதபோது, மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது. அண்ணாமலை தவறு செய்துவிட்டதாக நீங்கள் கருதினால், என்னைப் புறக்கணிக்க உங்களுக்கு முழு உரிமை உள்ளது. நான் தவறு செய்யவில்லை, அதனால் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது” என்று பேசிவிட்டு சென்றார். தற்போது அண்ணாமலையின் இந்தப் பேச்சும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.