மாநில அரசை குறை சொல்லவில்லை: அண்ணாமலை அந்தர் பல்டி!

கோவையில் கடந்த 23ஆம் தேதி டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் மாநில அரசையும், தமிழ்நாடு காவல்துறையையும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்த நிலையில், மாநில அரசிடம் நாங்கள் வைத்துள்ள கேள்விகள் எல்லாம் மாநில அரசு நன்றாக செயல்பட வேண்டும் என்பதற்காகவே தவிர, மாநில அரசு மீது குற்றம் குறை காண்பிக்கவோ, மாநில அரசுக்கு தொந்தரவு அளிக்க வேண்டும் என்பதற்காகவோ அல்ல என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோட்டை ஈஸ்வரன் சுவாமியால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக கூறியிருந்த அண்ணாமலை, அக்கோயிலுக்கு சென்று தரிசனம் செய்யவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று கோவை சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோட்டை ஈஸ்வரன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து கோயில் பூசாரிகளிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்வில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கோவையில் பாஜக மகளிர் அணி சார்பில் கோயிலில் கூட்டு பிராத்தனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கலந்து கொண்டு கந்தசஷ்டி கவசத்தை அண்ணாமலை வாசித்தார்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, கோவையில் பெரும் நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோட்டை ஈஸ்வரன், முருகனுக்கு நன்றி கடன் செலுத்தி விட்டு, மத நல்லிணக்கம் மத ஒற்றுமையை வலியுறுத்தி கோவை மக்கள் வாழ்க்கை பயணம் நன்றாக இருக்க வேண்டும் என்று கந்த சஷ்டி கவசத்தை ஒன்றாக பாடி உள்ளோம் என தெரிவித்தார்.

1998 குண்டு வெடிப்பிற்கு பிறகு கோவையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அந்த குண்டு வெடிப்பிற்கு பிறகு கோவையின் வளர்ச்சி பின்னோக்கி சென்றுள்ளது. கடந்த பத்து வருடங்களாக கோவையில் உள்ள மக்கள், தொழிலதிபர்கள் கோவையை முன்னெடுத்து செல்கின்றனர் இந்த நேரத்தில் இந்த தற்கொலை தாக்குதல் நடந்திருந்தால் கோவை மாவட்டம் இன்னும் 20 வருடங்கள் பின்னோக்கி சென்றிருக்கும். அதனை தடுத்து நிறுத்திய முதல் காக்கும் கடவுள்களான காவல்துறைக்கும், துணை தாக்குதல் எதுவும் நடைபெறாத வண்ணம் உயிரை பணயம் வைத்து பணி செய்த கோவை மாநகர காவல் துறையினருக்கும் நன்றி தெரிவித்தார்.

சதிகார்கள் மதத்தால் பிளவுபடுத்த முயற்சித்தாலும் கூட கோவை மக்கள் ஒன்றாக இருப்பதாக அண்ணாமலை கூறினார். கடந்த 23ம் தேதி நடந்த சம்பவத்திற்கு பிறகு இங்குள்ள இஸ்லாமிய பெருமக்கள் மதகுருமார்கள் கூட நல்ல கருத்துக்களை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கோவையில் உள்ள மக்கள் வன்முறையை கையில் எடுக்கக் கூடாது வன்முறையை கையில் எடுப்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கக்கூடாது எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மாநில அரசிடம் நாங்கள் வைத்துள்ள கேள்விகள் எல்லாம் மாநில அரசு நன்றாக செயல்பட வேண்டும் என்பதற்காகவே தவிர மாநில அரசு மீது குற்றம் குறை காண்பிக்கவோ மாநில அரசுக்கு தொந்தரவு அளிக்க வேண்டும் என்பதற்காகவோ அல்ல என்றார்.

இன்னும் காவல்துறையினர் இதனை சிலிண்டர் வெடித்தது என்று கூறுவதற்கு என்ன காரணம் அதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, சம்பவத்தின் போது கைப்பற்றப்பட்ட பொருட்கள் என சிலவற்றை (கோலிகுண்டு, ஆணி) காண்பித்தார். ஐஎஸ்ஐஎஸ் என்பது தவறான சித்தாந்தம் என இஸ்லாமிய மதத்தில் உள்ள குருமார்களே சொல்கிறார்கள். எனவே அவர்களை விடக்கூடாது அவர்களின் மீது கோபமாகத்தான் இருக்க வேண்டும். கூடிய விரைவில் இஸ்லாமிய குருமார்களையும் சந்திக்க உள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

மத்திய அரசு ஏற்கனே ஒற்றை ஓநாய் தாக்குதல் நடத்த கூடும் என முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. காவல்துறை எப்போதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு போய்விட கூடாது அதனை பாஜக கட்சி ஒரு வாய்ப்பாக வைத்து பேசவும் மாட்டோம். மத்திய அரசு இதில் தலையிட வேண்டும் என கூற மாட்டோம். இச்சம்பவத்தை வைத்து அரசியல் செய்யவோ அல்லது பலனடையவோ பாஜக விரும்பாது என்றும் அவர் கூறினார்.

மேலும் காவல்துறையில் பணிசுமை உள்ளதாகவும் ஆள்பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவித்த அண்ணாமலை, காவல்துறையில் சில கவனக்குறைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், உளவு பிரிவு சிலரை கண்காணிக்கும் பணியை தவற விட்டு விட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

பத்திரிக்கையாளர்களை பார்த்து யாரும் குரங்கு என்று சொல்லவில்லை பத்திரிக்கையாளர்களை பார்த்து “குரங்கு போல் தாவி தாவி வந்து என்னை பேச விடாமல் பேட்டி எடுக்கிறீர்கள்?” என்றுதான் கூறினேன். இரண்டும் வேறு அர்த்தம் எனவே, அது குறித்து நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் எனவும் அப்போது அண்ணாமலை தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.