புதுச்சேரி: புதுச்சேரி எம்.டி., – எம்.எஸ்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங்கை இறுதி செய்து அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. இன்று (31ம் தேதி) துவங்கி, அடுத்த மாதம் 14ம் தேதிக்குள் ஒட்டு மொத்த கவுன்சிலிங்கையும் நடத்தி முடிக்க சென்டாக் திட்டமிட்டு உள்ளது.
புதுச்சேரி மாநில அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில்எம்.டி.எம்.எஸ்., எம்.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகள் உள்ளன. இந்த முதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கு கடந்த ஜூன் மாதமே விண்ணப்பம் பெற்றும், கூட சென்டாக் கவுன்சிலிங் நடத்தவில்லை.
எம்.டி., எம்.எஸ்., படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில், இரண்டு கட்ட கவுன்சிலிங் நடத்தப்பட்ட சூழ்நிலையில், புதுச்சேரியில் ஒரு கவுன்சிலிங் கூட நடத்தாதது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அகில இந்திய ஒதுக்கீடு கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த மாணவர்கள், சென்டாக் முதுநிலை கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் பெற்றோர், மாணவர்கள் அதிருப்தியடைந்தனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் ஒரு வழியாக எம்.டி.,எம்.எஸ்., எம்,டி.எஸ்., படிப்பிற்கான முதற்கட்ட கவுன்சிலிங் தேதியை இறுதி செய்து, சென்டாக் கவுன்சிலிங் அட்டவணை வெளியிட்டுள்ளது.
இன்று 31ம் தேதி முதல் 2ம் தேதி வரை முதற்கட்ட கவுன்சிலிங் நடத்தப்படும் என்றும், இடம் கிடைத்த மாணவர்கள் வரும் 2ம் தேதியே சேர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. முதற்கட்ட கவுன்சி லிங்கில் சீட் கிடைத்த மாணவர்களின் உத்தேச பட்டியல் இணைய தளத்தில் வெளியிடப் பட்டுள்ளது. இரண்டாம் கட்ட கவுன்சிலிங் 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இதற்கான பாட பிரிவு முன்னுரிமை 3ம் தேதி நடக்கின்றது. இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் இடம் கிடைத்த மாணவர்கள் வரும் 7ம் தேதிக்குள் கல்லுாரியில் சேர வேண்டும்.
தொடர்ந்து இறுதி கவுன்சிலிங்கான மாப் அப் கவுன்சிலிங் 9ம் தேதி துவங்கி 14ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான முன்னுரிமை 8ம் தேதி கொடுக்கலாம் என சென்டாக் அறிவுறுத்தியுள்ளது.
எவ்வளவு இடங்கள் இந்தாண்டு மருத்துவ மேற்படிப்புகளுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. எம்.டி., எம்.எஸ்., படிப்புகளுக்கு 1,537 பேரும், முதுநிலை பல் மருத்துவ படிப்பிற்கு 111 பேர் என 1,648 மருத்துவ மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
அரசு ஒதுக்கீட்டு இடங்களை பொருத்தவரை, கிளினிக்கல் படிப்பில் 93 சீட்டு, நான்-கிளினிக்கல் படிப்பில் 39 சீட்டு என 132 சீட்டுகள் இந்தாண்டு நிரப்பப்பட உள்ளது.
நிர்வாக இடங்களை பொறுத்தவரை கிளினிக்கல் படிப்பில்-34 சீட்டுகள், நான்-கிளினிக்கல் படிப்பில்-13 சீட்டுகள் என 47 சீட்டுகள் இந்தாண்டு நிரப்பப்பட உள்ளது.
சிறுபான்மை கிறிஸ்துவ கல்லுாரி நிர்வாக இடங்களை பொறுத்தவரை கிளினிக்கல் படிப்பில்-19, நான் – கிளினிக்கல் படிப்பில் – 10 என, மொத்தம் 29 சீட்டுகள் உள்ளன.
சிறுபான்மை தெலுங்கு கல்லுாரியில் நிர்வாக சீட்டுகளை பொறுத்தவரை கிளினிக்கல் படிப்பில் -28, நான்-கிளினிக்கல் படிப்பில்-10 என மொத்தம் 38 சீட்டுகள் நிரப்பப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்