போபால்: கொல்கத்தாவில் நடந்த மேல்பால விபத்து தொடர்பாக மம்தாவை விமர்சித்த மோடி, இன்று மோர்பி பாலம் விபத்து தொடர்பாக என்ன சொல்லப் போகிறார்? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கேள்வி எழுப்பி உள்ளார். குஜராத் மாநிலம் மோர்பியில் நடந்த கேபிள் பாலம் விபத்தில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 180க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தை தொடர்ந்து குஜராத்தில் ஆளும் பாஜக குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த 2016ம் ஆண்டில் கொல்கத்தாவில் நடந்த விவேகானந்தா சாலை மேம்பாலம் விபத்து நடந்த ேபாது, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை பிரதமர் மோடி விமர்சித்தார். இப்போது காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், மோர்பி பாலம் விபத்து குறித்து பிரமதர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘மோடி அவர்களே, மோர்பி பாலம் விபத்து, கடவுளின் செயலா அல்லது மோசடி செயலா? இந்த பாலத்தினை 6 மாதங்களாக சீரமைத்தனர். இதற்காக எவ்வளவு பணம் செலவானது? திறப்பு விழா நடந்து அடுத்த 4 நாட்களில் விழுந்தது! கடந்த 27 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது.
இது உங்களது குஜராத் மாடலா?’ என்று கேள்வி எழுப்பி உள்ளார். கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா சாலை மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தின் போது பலர் உயிரிழந்துள்ளனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, ‘தேர்தல் நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதால், எப்படிப்பட்ட ஆட்சி இங்கு நடக்கிறது என்பதை மக்கள் தெரிந்துகொள்வார்கள். இது ஒரு தெய்வீக செயல்’ என்று பேசியது குறிப்பிடத்தக்கது.