காந்திநகர்: குஜராத் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 132 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இறந்தவர்களில் 12 பேர் குஜராத் மாநில பாஜக எம்.யின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
குஜராத் தலைநகர் காந்தி நகர் அருகே மச்சு நதி மீது கட்டப்பட்டுள்ள நூற்றாண்டை கடந்த 230 மீட்டர் நீள இந்த தொங்கு பாலம் சுமார் 6 மாத பழுது பார்ப்புக்கு பிறகு, தீபாவளி அன்று மீண்டும் திறக்கப்பட்டது. இதையடுத்து, அந்த பாலத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் தொங்கு பாலத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
மக்கள் பாலத்தின்மீது அதிக அளவு குவிந்ததால், பாரம் தாங்க முடியாமல் நேற்று மாலை 6.30 மணியளவில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. பாலத்தில் இருந்தவர்கள் நதியில் விழுந்து தத்தளித்தனர். இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 177 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 60 பேர் காணவில்லை. தேசிய மற்றும் மாநில மீட்பு படையினர், காவல்துறையினர், உள்ளூர் மக்கள் மீட்பு பணியின் ஈடுபட்டுள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் 20 -25 வயதுக்குட்பட்டவர். இதுவரை 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த கோர விபத்தில், குஜராத் ராஜ்கோட் தொகுதி பாஜக எம்.பி மோகன்பாய் கல்யாண்ஜி குந்தாரியா குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் உட்பட 12 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன், அவரது சகோதரியின் குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்களும் இறந்துள்ளதாக அவர் வேதனையும் தெரிவித்துள்ளார்.
132 பேரை பலி வாங்கிய குஜராத் மோர்பி பாலம் எப்போது, யாரால் கட்டப்பட்டது தெரியுமா?