குஜராத் மாநிலம் மோர்பியில் உள்ள தொங்கும் பாலம் நேற்று மாலை எதிர்பாராதவிதமாக உடைந்து விழுந்தது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் பலி எண்ணிக்கை 100ஐ தாண்டி விட்டது. பாலம் உடைந்து விழுந்ததை அறிந்த உள்ளூர் மக்கள் ஓடிவந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ஆற்றுக்குள் குதித்து தத்தளித்த நபர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
தங்கள் சொந்த வாகனங்கள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் போலீசார், தீயணைப்புத் துறையினர், ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மோர்பி பால விபத்து பற்றி தகவலறிந்து முதல்வர் பூபேந்திர படேல், உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி, அமைச்சர் பிரிஜேஷ்பாய் மெர்ஜா, மத்திய இணையமைச்சர் ஸ்ரீ அர்விந்த்பாய் ரையானி ஆகியோர் நள்ளிரவில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர். மேலும் போதிய ஏற்பாடுகளை விரைவாக செய்யுமாறு உத்தரவுகளை பிறப்பித்தனர். இந்நிலையில் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தொடர்ந்து அங்கேயே முகாமிட்டார். இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அவர், பலி எண்ணிக்கை 132ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
மண்டல ஐஜிபி தலைமையில் இன்றே விசாரணை தொடங்கியுள்ளது. இரவு நேரத்திலும் மீட்பு பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டோம். கடற்படை, தேசிய பேரிடர் மீட்பு படை, விமானப்படை, ராணுவத்தினர் விரைவாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் வேகமாக வந்து இரவு முழுவதும் கண் விழித்து மீட்பு மற்றும் தேடுதல் பணிகளை மேற்கொண்டனர்.
அகமதாபாத்தில் இருந்து புறப்படுவதற்கு முன்னதாகவே, உயர்மட்ட குழு ஒன்றை அமைத்து விசாரணைக்கு முதல்வர் பூபேந்திர படேல் உத்தரவிட்டுள்ளார். பல்வேறு பகுதிகளில் பணியில் இருந்த அதிகாரிகள், காவலர்கள் உள்ளிட்டோர் நள்ளிரவு 2 மணிக்குள் மோர்பிக்கு வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தற்போது பாலம் உடைந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஹர்ஷ் சங்வி தெரிவித்தார். சமீபத்தில் கிடைத்த தகவல்களின் படி, ட்ரோன் கேமராக்கள், படகுகள் மூலம் பல்வேறு குழுக்களாக பிரிந்து ஆற்றில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 40க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுவினர் மோர்பி பாலம் அருகே முகாமிட்டுள்ளனர்.
காயமடைந்த நபர்களுக்கு ராஜ்கோட் பி.டி.யூ மருத்துவமனை, சுரேந்திரா நகர் சிவில் மருத்துவமனை உள்ளிட்டவற்றில் அவசரகால மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர ராஜ்கோட், ஜாம்நகர், ஜூனாகத் நகராட்சி, மோர்பி நகராட்சி ஆகியவற்றில் இருந்து இரவு முழுவதும் ஏராளமான ஆம்புலன்ஸ்கள் தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வந்தன. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.