எந்த வரைமுறைகளும் இல்லாமல், எந்த லாஜிக்கும் இல்லாமல், ரத்தம் தெறிக்கத் தெறிக்க இருபுறமிருந்தும் ஆட்கள் கூட்டம் கூட்டமாக மோதிக்கொள்ள வேண்டும். இப்படியான சண்டைக்காட்சிகளால் நிரம்பிய திரைப்படங்களுக்கே இப்போது அதிக மவுசு இருக்கிறது. ரசிகர்களுமே அவற்றைத்தான் அதிகமாக விரும்பிப் பார்க்கின்றனர். அந்தவகையில், நாம் இப்போது பார்க்கப்போகும் விளையாட்டை மையமாக வைத்து வெகு சீக்கிரமே கோலிவுட் இயக்குநர்கள் ஒரு படத்தை இயக்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. மைதானத்தை டாப் ஆங்கிளில் படம் பிடித்தால் வெறும் புழுதிப் படலம் மட்டுமே ஆக்கிரமித்திருக்கக்கூடிய அந்த விளையாட்டின் பெயர் ‘புஷ்காஷி.’ ஆப்கானிஸ்தான் நாட்டின் தேசிய விளையாட்டு இது.
அமெரிக்கப் படைகள் வெளியேறி தாலிபன்களின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் முழுமையாக வந்திருந்த சமயத்தில் இணையதளங்களில் சில வீடியோக்கள் வைரலாகின. அவற்றில், ஆயுதம் ஏந்திய தாலிபன் படைவீரர்கள் குழந்தைகள் ஆடும் ராட்டினத்திலெல்லாம் ஆடிக் குதூகலித்ததை பெரும்பாலும் அனைவரும் ரசித்துப் பார்த்திருப்போம். ‘குழந்தைப் பசங்க சார்…’ என உலகமே தாலிபன்களை நோக்கி சர்க்காஸ்ட்டிக் கமெண்ட்டுகளை வீசியது. ஆனால், இவ்வாண்டு தொடக்கத்தில் தாலிபன்கள் தடையை நீக்கி விளையாட அனுமதித்திருக்கும் ‘புஷ்காஷி’ ஆட்டம் குழந்தை மனம் படைத்தவர் களுக்கானதல்ல. வேட்டைத்தனத்தின் தாண்டவமும், ஆதிமனித மனத்தில் நிரம்பியிருந்த குரூரமும் முழுமையாக வியாபித்திருக்கும் போட்டி அது.
தமிழ்நாட்டின் ‘ஜல்லிக்கட்டு’, கர்நாடகாவின் ‘கம்பாலா’ போன்று நமக்குப் பரிச்சயமான விலங்குகளைப் பயன்படுத்தி ஆடும் ஆட்டத்தைப் போன்றதுதான் புஷ்காஷியும். ஆனால், இதன் வீரியம் நாம் இதற்கு முன் கண்டிராதது. செத்துப்போன ஆடுகள் அல்லது கன்றுகளின் தலைகளை மட்டும் அகற்றிவிட்டு அவற்றின் சிதையை மையமாக வைத்தே இந்த ஆட்டம் ஆடப்படுகிறது. சிதைகளைத் தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைத்து, சில சமயங்களில் அவற்றினுள் மணலை அடைத்தும்கூடப் பயன்படுத்தப்படுகிறது. கரடுமுரடான மைதானத்தில் குதிரை மேல் அமர்ந்திருக்கும் வீரர்கள் இரு அணிகளாகப் பிரிந்து கொள்வார்கள். ஆடு அல்லது கன்றினுடைய பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்ட அந்தச் சிதையைப் பறித்துக்கொண்டுசென்று தூரத்தில் இருக்கும் ‘நீதியின் வட்டம்’ என அழைக்கப்படும் அந்த வட்டத்தினுள் போடவேண்டும். நீதியின் வட்டத்தை நெருங்கவிடாமல் எதிரணியினர் தடுப்பார்கள். அவர்களைத் தாண்டி அந்த வட்டத்தை அடைய வேண்டும். கால்பந்தில் கோல் அடிப்பதைப் போன்றதுதான் இதுவும். ஆனால், கால்பந்துக்கென்று நிறைய வரைமுறைகள் இருக்கின்றன. எக்கச்சக்கமான விதிமுறைகள் இருக்கின்றன. இங்கே அதெல்லாம் பெரிதாகக் கிடையாது. மேலே குறிப்பிட்டதைப் போல புழுதி பறக்க ஒரு ஆக்ஷன் காட்சியைப் பார்ப்பதைப் போன்ற உணர்வுதான் இதைப் பார்க்கையில் ஏற்படும்.
மேலே குறிப்பிட்டது ‘புஷ்காஷி’ ஆட்டத்தின் ஒரு வகை. இதேபோன்று அணிகளின்றிக் கூட்டமாகவும் வேறுவிதங்களிலும் இந்த ஆட்டம் ஆடப்படுகிறது. இந்த விளையாட்டின் பின்னணி என்னவெனத் தேடும்போது, துருக்கி-மங்கோலிய நாடோடிகளின் இடப்பெயர்வின் போது 10 மற்றும் 15-ம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இந்த விளையாட்டு தோன்றியதாக ஒரு செய்தி இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், ஆப்கானிஸ்தான் பழங்குடிகள் எதிர்த்தரப்பினரின் கால்நடைகளை வேட்டையாடித் தங்கள் முகாமுக்குக் கடத்தி வரும் வழக்கமே மருவி ‘புஷ்காஷி’ ஆக மாறியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்போது ஆப்கானிஸ்தானில் மட்டு மல்லாமல் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் போன்ற நாடுகளிலும் இந்த விளையாட்டு கிளை பரப்பியிருக்கிறது.
ஜல்லிக்கட்டில் மாடுகளைப் பிடிப்பது ஒரு கலையாகவும் வீரத்தின் அடையாள மாகவும் பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டுக் காளைகளை வளர்ப்பதும் ஒரு தனி கௌரவமாக பாவிக்கப்படுகிறது. நம் மண்ணுக்கு ஒத்த இதே தன்மைகளை இந்த ‘புஷ்காஷி’ ஆட்டம் தன்னகத்தே கொண்டிருக்கிறது. இந்த விளையாட்டுகளில் பங்கேற்கும் வீரர்கள் அனைவராலும் சொந்தமாகக் குதிரைகளை வாங்கி அவற்றை முறையாகப் பராமரிக்க முடியாது. அந்த அளவுக்குப் பொருளாதார வசதி அவர்க ளிடம் இருக்காது. இதனால் ஊரிலேயே பெரிய செல்வந்தர்கள் குதிரைகளை வாங்கி இந்த ஆட்டத்திற்கென்றே பிரத்யேகமாகத் தயார் செய்து வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையையும் போட்டி நடைபெறுவதற்கு முன்பாக நல்ல அனுபவமுள்ள வெல்லும் திறனுடைய சப்பந்தாஸ்களைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தங்களின் குதிரைகளைப் போட்டியில் ஆடுவதற்காகக் கொடுக்கிறார்கள். இந்தப் போட்டியில் ஆடி நிபுணத்துவம் பெற்றவர்களே ‘சப்பந்தாஸ்’ என அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் போட்டியில் குதிரையோடு ஆடிக் கிடைக்கும் பரிசுப்பொருள்களையும் பணத்தையும் குதிரைக்காரர்களோடு பங்கிட்டுக்கொள்கிறார்கள். பரிசைத் தாண்டி, பெருமிதத்தின் அடையாளமாகக் கருதும் தங்களின் குதிரை வெல்ல வேண்டும் என்பதே செல்வந்தர்களின் முதன்மை நோக்கமாக இருக்கிறது.
கடந்த நூற்றாண்டில் அமெரிக்கா, சோவியத் ரஷ்யா, உள்ளூர் அமைப்புகள் என ஆப்கானிஸ்தானை ஆள நடந்த யுத்தத்தின் போதுமே எல்லாத் தரப்பும் இந்த ஆட்டத்தை ஊக்குவித்திருக்கிறது. 90-களின் இறுதியில் தாலிபன்கள் ஆட்சியிலேயே இந்த ‘புஷ்காஷி’ ஆட்டத்திற்கு முழுமையாகத் தடைவிதிக்கப்பட்டது. மக்களின் பிரதான பொழுதுபோக்காக இந்த ஆட்டம் இருப்பது அறமற்ற செயல் என்பதால் தாலிபன்கள் தடைவிதித்திருக்கிறார்கள். இடையில் அமெரிக்கப் பிடியில் ஆப்கானிஸ்தான் சென்றபோது இந்த ஆட்டம் வழக்கம்போல ஆடப்பட்டது. இப்போது தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். மக்களின் பொழுதுபோக்குகளுக்கு மூடுவிழா நடத்தும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கினர். ஆயினும், இந்த முறை ‘புஷ்காஷி’ தப்பித்துவிட்டது. தாலிபன்களும் இந்த விளையாட்டிற்கு அனுமதி கொடுத்து விட்டனர். கடந்த பிப்ரவரி-மார்ச்சில் தேசிய சாம்பியன்ஷிப் தொடரும் நடந்து முடிந்திருக்கிறது. நாடே குலைந்துபோய் மீள முடியாமல் அன்றாடமே சங்கடமாகிப் போயிருந்த சூழலிலும் அந்தத் தொடருக்கு வீரர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதன்மூலம் அந்த மக்களின் பாரம்பரியத்தில் இந்த ஆட்டம் எவ்வளவு ஊறியிருக்கிறது என்பதை உணர முடியும். என்னதான் இருந்தாலும் வயலன்ஸ் கொஞ்சம் ஜாஸ்திதான் பாஸ்!