ரஷ்ய அதிபரின் படையில் நோய் பீடிக்கப்பட்ட கைதிகள்| Dinamalar

மாஸ்கோ, உக்ரைனுக்கு எதிரான போரில் பங்கேற்பதற்காக, ‘வாக்னர் குரூப்’ என்ற ரஷ்ய அதிபரின் தனிப்பட்ட படையில், ‘எய்ட்ஸ், ஹெபாடிடிஸ் – சி’ நோய்களால் பீடிக்கப்பட்ட சிறை கைதிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. கடந்த பிப்ரவரியில் துவங்கிய இந்தப் போர், எட்டு மாதங்களைக் கடந்தும் தொடர்கிறது. உக்ரைனின் பதில் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ரஷ்ய படைகள் திணறுகின்றன.

இந்நிலையில், ரஷ்ய அதிபரின் தனிப்பட்ட ராணுவம் என்றழைக்கப்படும், வாக்னர் குழுவுக்கு புதிதாக ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தப் படைக்கு, எய்ட்ஸ், ஹெபாடிடிஸ் – சி போன்ற நோய்களால் பீடிக்கப்பட்டுள்ள சிறை கைதிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட, 100 கைதிகள் தற்போது உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஷ்யா மற்றும் அதன் அதிபரின் மறைமுக திட்டங்களை நிறைவேற்ற இந்தப் படை உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன், தீவிர பயிற்சி உள்ளவர்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், தற்போது இந்தப் படையில் சேருவதற்கு ரஷ்ய மக்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தேவையான வீரர்களும் கிடைக்கவில்லை.

இதனால், நோயால் பீடிக்கப்பட்டுள்ள கைதிகளை படையில் சேர்க்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, இந்தப்படையில் ஏற்கனவே உள்ள வீரர்களுக்கும், இந்தபுதிய வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

புடினை நீக்க பேச்சு?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை அந்தப் பதவியில் இருந்து நீக்குவது குறித்து, அந்த நாட்டில் உயர்நிலை பேச்சு நடந்து வருவதாக உக்ரைன் கூறியுள்ளது.உக்ரைன் ராணுவத்தின் புலனாய்வு பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் கிரிலோ புடனோவ் கூறியதாவது:அதிபர் பதவியில் விளாடிமிர் புடின் நீண்ட நாட்கள் தாங்க மாட்டார். அவரை அப்பதவியில் இருந்து நீக்குவது குறித்து, அந்த நாட்டின் உயரதிகாரிகள் இடையே பேச்சு நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.