ரூட்டை திருப்பும் அண்ணாமலை… கோவைக்கு பெரிய பூட்டு… பகீர் கிளப்பும் ராஜீவ் காந்தி!

கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிவிபத்து விவகாரம் அடுத்தடுத்து விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கைது, விசாரணை, தடயங்கள் சேகரிப்பு, என்.ஐ.ஏ விசாரணை என பரபரப்பை கூட்டி வருகிறது. இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கு திமுகவின் செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி.

அரசியல் பிழைப்பிற்காக பேசி வருகிறார். இவர் வெளியிட்ட அறிக்கை காவல்துறையை களங்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் நகரமாக கோவை இருக்கிறது. இத்தகைய சூழலில் வாக்கு வங்கி அரசியலுக்காக பாஜக பதற்றத்தை கூட்டி வருவதாக தெரிவித்தார். மேலும் பேசுகையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து இடம்பெயறும் தொழில் நிறுவனங்கள் கோவையை நோக்கி படையெடுத்து வருகின்றன.

இதனால் கோவை அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் பெங்களூருவில் லஞ்சம், ஊழல் அதிகமாக உள்ளது. தொழில்துறையினரின் பார்வையில் கர்நாடக முதல்வர் PayCM ஆக மாறிவிட்டார். இதனால் கோவை பக்கம் வரத் தொடங்கியுள்ளனர். இந்த இடத்தில் பெருமைமிகு கன்னடன் என்று கூறும் அண்ணாமலை, கோவை பதற்றமாக உள்ளது.

எனவே இங்கு வரும் நிறுவனங்களை கர்நாடகாவிற்கு கொண்டு செல்ல திட்டமிடுகிறார். கோவை வந்தால் தொழில் செய்ய முடியாது என்று மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். இதற்காகவே கோவையை பதற்றத்துடன் வைத்திருக்க நினைக்கிறார். மேலும் தமிழக அரசியலில் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் முன்கூட்டியே அண்ணாமலைக்கு இருந்துள்ளது. இதற்காக சில ஆய்வுகளையும் செய்திருக்கிறார்.

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் பாஜக தலைவராக வந்துள்ளார். பத்திரிகையாளர் ஒருவரை வைத்து பாஜக நிர்வாகியான ராகவனை முதலில் காலி செய்தார். தற்போது வானதி சீனிவாசன் உள்ளிட்டோரை காலி செய்ய அண்ணாமலை வேலை செய்வதாக பகீர் தகவலை ராஜீவ் காந்தி வெளியிட்டுள்ளார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிட்டார்.

அங்குள்ள பள்ளப்பட்டி என்ற கிராமத்தில் 214வது வாக்குச்சாவடியில் ஒரேவொரு ஓட்டு மட்டும் அண்ணாமலைக்கு கிடைத்தது. எனவே வெறும் ஒரு ஓட்டு மட்டுமே பெற்ற அண்ணாமலை அரசியல் ரீதியாக அமைச்சர் செந்தில் பாலாஜியை வீழ்த்த நினைக்கிறார். ஆனால் அமைச்சரின் செயல்பாடுகள் கோவையில் இனிமேல் ஒரு அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது என்ற வகையில் இருக்கின்றன.

மக்கள் மத்தியில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இந்த சூழலில் பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவராக அண்ணாமலையின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும்? அனைவரையும் ஒன்றிணைத்து பயங்கரவாத சக்திகளை அடையாளம் காண்போம் என்ற வகையில் இருக்க வேண்டாமா? ஆனால் பந்த் நடத்துகிறோம் என எதை எதையோ செய்து கொண்டிருப்பதாக ராஜீவ் காந்தி குற்றம்சாட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.