மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அரசு பதவியேற்ற பிறகு பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த பாதுகாப்பை அரசு முற்றிலுமாக விலக்கிக்கொண்டது. ஒரு சில எதிர்க்கட்சித்தலைவர்களுக்கு மட்டும் தொடர்ந்து பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்திருந்த மகாராஷ்டிரா காங்கிரஸ் மூத்த தலைவர் தோரட், “அரசு இப்போது ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்குத்தான் முழு பாதுகாப்பு கொடுக்கவேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
அவர் தெரிவித்த அடுத்த நாளே ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இருக்கும் 41 எம்.எல்.ஏ.க்கள், 10 மக்களவை எம்.பி.க்களுக்கு ஒய்பிளஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். ஏக்நாத் ஷிண்டே, பட்னாவிஸ், கவர்னர் கொஷாரியாவிற்கு வழங்கப்படும் இசட் பிளஸ் பிரிவு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. உத்தவ் தாக்கரே, சரத் பவார், முன்னாள் முதல்வர்கள் அசோக் சவான், பிருத்விராஜ் சவான் ஆகிய எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் மட்டும் பாதுகாப்பு கொடுக்கபட்டு வருகிறது.
இது தவிர உத்தவ் தாக்கரே மனைவி ரேஷ்மி தாக்கரே, தாக்கரேயின் மகன் தேஜஸ் ஆகியோருக்கும் இப்பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதாவின் பாதுகாப்பு ஒய்பிளஸில் இருந்து எக்ஸ்க்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிராக போராடிக்கொண்டிருப்பவராக கூறிக்கொள்ளும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேயிக்கு தொடர்ந்து எக்ஸ் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே, நடிகர் சல்மான் கான், தொழிலதிபர் முகேஷ் அம்பானி ஆகியோருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சமீப காலமாக உத்தவ் தாக்கரேயிக்கு எதிராக கடுமையாக விமர்சனங்களை செய்து வருகின்றனர். இதனால் அவர்கள் உத்தவ் தாக்கரே ஆதரவாளர்களால் தாக்கப்படும் அபாயம் இருப்பதால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளின் பாதுகாப்பை குறைப்பதும், கூட்டுவதுமாக இருக்கும் மாநில அரசு மேலும் ஒரு தொழிற் முதலீட்டை இழந்துள்ளது. பிரான்ஸின் விமானம் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு நிறுவனத்தை மகாராஷ்டிராவின் நாக்பூரில் தொடங்குவதாக இருந்தது. ஆனால் சரியான நிலம் தேர்வு செய்ய முடியாததால் அத்திட்டம் தெலங்கானாவிற்கு சென்றுவிட்டது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.