ஸ்ரீமுத்துமலை முருகனுக்கு அரோகரா… முதல்முறை நடந்த பிரம்மாண்ட சூரசம்ஹார விழா!

சேலம் மாவட்டம் புத்திரகவுண்டன்பாளையம் பகுதியில் ஸ்ரீமுத்துமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகன் சிலை உலகிலேயே மிக உயரமானது. அதாவது, 146 அடி உயரம் கொண்டது. இந்த கோயிலில் முதலாம் ஆண்டு சூரசம்ஹார விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 25ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு யாகங்கள், அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.

மாலை நேரங்களில் முருகப்பெருமான் பல்லக்கில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை, கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வளாகம் முழுவதும் மின்னொளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு ஹோமமும் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்று (அக்டோபர் 31) சூரசம்ஹார விழாவிற்கான ஏற்பாடுகள் மிகவும் பிரம்மாண்டமான முறையில் செய்யப்பட்டிருந்தன. அதுமட்டுமின்றி 5ஆம் நாள் நிகழ்ச்சியாக மூலவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு யாகம் செய்யப்பட்டது. மாலை 4.30 மணியளவில் உற்சவருக்கு மூலவர் அபிஷேகம் செய்து, பல வண்ண மலர்களால் அலங்கரித்து சூரசம்ஹாரம் செய்யும் மைதானத்திற்கு பள்ளக்கில் தூக்கி வந்தனர்.

சூரபத்மனின் தம்பியும், யானை முகம் கொண்ட தாரகாசூரன் முதலில் தனது படையுடன் தலையை ஆட்டியபடி முருகனை நோக்கி போர் புரிய வந்தான். அவனை கண்ட முருகன் தனது வேலால் வதம் செய்து தலையை கொய்தார். இதையடுத்து சூரபத்மனின் மற்றொரு தம்பியான சிங்கமுகம் கொண்ட சிங்கமுகாசூரன் தலையை ஆட்டியபடி வந்தான்.

அவனையும் வேலால் முருகன் வதம் செய்தார். இதனை பக்தர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். இரண்டு சகோதரர்களும் வீழ்ந்ததை அடுத்து, சூரபத்மன் போரிடுவதற்காக வந்தான். ஆனால் நேரடியாக வராமல் மாய வடிவம் எடுத்து போக்கு காட்டினான். இந்த சூழலில் மாமரம் போன்று வடிவம் எடுத்து வந்த சூரபத்மனை இரண்டாக பிளந்து முருகன் சூரசம்ஹாரம் செய்தார்.

உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடைப்பயணம்

அப்போது கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்று முழக்கங்கள் எழுப்பினர். மாலை 6.30 மணியளவில் கோயிலை சுற்றி உற்சவர் அழைத்து வரப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் சுவாமி தரிசனம் செய்ய சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் முருகப் பெருமானை தரிசனம் செய்து சென்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.