100ஐ தாண்டிய பலி… குஜராத் மோர்பி பாலம் எப்படி உடைந்து விழுந்தது? பகீர் தகவல்!

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள மிகவும் பழமையான கேபிள் பாலம் என்று அழைக்கப்படுகிற தொங்கும் பாலம் நேற்று மாலை 6.40 மணியளவில் திடீரென உடைந்து விழுந்துள்ளது. இது தர்பார்கர் அரண்மனை மற்றும் லக்திர்ஜி பொறியியல் கல்லூரியை இணைக்கும் வகையில் கட்டப்பட்டிருந்தது. பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட புகழ்பெற்ற இந்த பாலம் பழுதடைந்து காணப்பட்டதால், சமீபத்தில் தான் புனரமைப்பு பணிகள் நடைபெற்றன. இதுதொடர்பான பணிகளுக்காக தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

பணிகள் முடிவடைந்த நிலையில் குஜராத் புத்தாண்டு தினத்தை ஒட்டி கடந்த மாதம் 26ஆம் தேதி பாலம் மீண்டும் திறக்கப்பட்டது. அடுத்த மூன்று நாட்கள் வேலை நாட்கள் என்பதால் பாலத்திற்கு வந்து பொதுமக்களால் நேரம் செலவிட முடியவில்லை. இந்த சூழலில் தான் வார இறுதி வந்தது. சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் மக்கள் அதிக அளவில் மோர்பி பாலத்திற்கு வந்து சென்றனர். அதுவும் ஞாயிறு அன்று ஏராளமானோர் குவிந்தனர்.

உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் என சுமார் ஆயிரம் பேர் வந்துள்ளனர். இந்நிலையில் தொங்கும் பாலத்தில் ஒரே சமயத்தில் 500க்கும் மேற்பட்டோர் நடக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது. எடை பெரிதும் கூடியதால் பாலத்தால் தாங்க முடியவில்லை. ஒருகட்டத்தில் பாலம் உடைந்து மச்சு ஆற்றுக்குள் விழுந்தது. அப்போது பாலத்தில் நடந்து சென்றவர்கள் அனைவரும் ஆற்றில் விழுந்தனர்.

பாலத்தின் ஒரு பகுதி உடையாமல் இருந்த சூழலில் அதில் உயிரை காப்பாற்றிக் கொள்ள பலரும் தொங்கி கொண்டிருந்தனர். ஆனால் நேரம் செல்ல செல்ல கைகளால் பிடித்திருக்க முடியவில்லை. ஒருசிலர் மேலே ஏறி வந்துவிட்ட நிலையில் எஞ்சியவர்கள் ஆற்றில் விழுந்தனர். இதில் நீச்சல் தெரிந்தவர்கள் எப்படியோ நீந்தி சென்று கரையை அடைந்தனர். ஆனால் நீச்சல் தெரியாதவர்கள் மாட்டிக் கொண்டனர்.

ஆற்றின் போக்கிற்கு அடித்துச் செல்லப்பட்டனர். இதுபற்றி தகவலறிந்து போலீசார், தீயணைப்புத் துறையினர், ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அதற்குள் 60க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்கள் வெளியாகின. அவர்களின் உடல்கள் படிப்படியாக மீட்கப்பட்டன.

இரவு முழுவதும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்நிலையில் இன்று காலை கிடைத்த தகவலின்படி, மோர்பி பாலம் உடைந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது. சில ஊடகங்கள் 130 பேர் வரை உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இந்த சம்பவம் குஜராத் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

பிரதமர் மோடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள குஜராத் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தகவலறிந்து மீட்பு பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் பூபேந்திர படேல் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். குடியரசுத் தலைவர் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.