குஜராத் மாநிலத்தில் மச்சு ஆற்றின் மீது பாரம்பரியமும், பெருமைமிகு வரலாறும் கொண்ட மோர்பி பாலம் உடைந்து விழுந்து 132 பேரின் உயிரை குடித்துள்ளது. இதற்கு பாலத்தின் மீது குறை சொல்லி என்ன பயன்? எல்லாம் மனிதத் தவறுகள் தான் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்த பாலம் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்டு வரலாற்றின் சாட்சியாக எழுந்து நின்று கொண்டிருந்தது.
இந்நிலையில் நேற்று நடந்த விபத்து நாடு முழுவதும் சோக அலைகளை ஏற்படுத்தியுள்ளது. மோர்பி பாலத்திற்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. 143 ஆண்டுகளுக்கு முன்பாக மோர்பியை ஆண்ட சர் வாகிஜி தாகூர் என்பவரால் இந்த தொங்கும் பாலம் கட்டப்பட்டது. நவீன ஐரோப்பிய கட்டிடக் கலையின் மீது ஆர்வம் கொண்டிருந்த சர் வாகிஜி தாகூர், அதே பாணியிலான பாலத்தை கட்டி எழுப்பினார்.
இதனை கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து பொருட்களும் இங்கிலாந்தில் இருந்து கொண்டு வரப்பட்டன. இது கலை மற்றும் தொழில்நுட்பத்தின் அதிசயமாக திகழ வேண்டும் என்ற நோக்கில் கட்டப்பட்டது. தர்பார்கத் அரண்மனை மற்றும் நாஸர்பாக் அரண்மனை ஆகியவற்றுக்கு இடையில் கட்டி எழுப்பப்பட்டது. தற்போது தர்பார்கத் அரண்மனை மற்றும் லக்திர்ஜி பொறியியல் கல்லூரிக்கு இடையில் அமைந்துள்ளது.
இதனை பொறியியலின் அதிசயம் என்று கூறுவோரும் உண்டு. இதற்கான கட்டுமான செலவு அந்த காலகட்டத்திலேயே 3.5 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இது 1879ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி முதன்முதலில் திறந்து வைக்கப்பட்டது. இதனை அப்போதைய மும்பை ஆளுநர் ரிச்சர்ட் டெம்பிள் திறந்து வைத்தார். 233 மீட்டர் நீளமும், 1.25 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பாலம், முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வந்துள்ளது.
2001ல் நிகழ்ந்த குஜராத் நிலநடுக்கத்தின் போது பாலம் பலத்த சேதமடைந்தது. அதன்பிறகு சீரமைக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது. தற்போது இந்தப் பாலம் ஒரேவா என்ற தனியார் நிறுவனத்திடம் 15 ஆண்டுகள் பராமரிப்பு மற்றும் மேற்பார்வை பணிகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் புனரமைப்பு பணிகளுக்காக பாலம் மூடப்பட்டது. 2 கோடி ரூபாய் மதிப்பில் வேலைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் கடந்த புதன் கிழமை அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
ஆனால் இதற்கான தரச் சான்று வழங்கப்படவில்லை. இந்த விஷயத்தில் அரசும் கவனக்குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. அதற்குள் அவசரமாக தொங்கும் பாலம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இதுதான் மிகப்பெரிய விபரீதம் நிகழ காரணமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் அதிக அளவில் கூடிய மக்கள் கூட்டமானது ஒரே நேரத்தில் பாலத்தில் பயணம் செய்தது. பலரும் பாலத்தை குலுக்கி கொண்டே இருந்துள்ளனர். இதுபற்றி புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் டிக்கெட் விற்பதிலேயே குறியாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது.