15-க்கும் மேற்பட்ட நாடுகளில் உயர்பதவி வகிக்கும் 200-க்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர்

புதுடெல்லி: இந்திய வம்சாவளியினர் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், பிரேசில், கனடா, நார்வே உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் வசிக்கின்றனர். அவர்களில் பலர் அங்கு உயர்பதவி வகிக்கின்றனர்.

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோரை இதில் சேர்க்கலாம். அண்மையில் பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இந்தப் பட்டியலில் இடம்பெற்றார். இவர் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன். சவுத்தாம்படனில் 1980-ல் பிறந்தவர் ரிஷி சுனக். இவரது தாத்தா, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பஞ்சாப் மாகாணத்தில் வசித்தவர்.

இதேபோல் கயானா நாட்டின் முதலாவது முஸ்லிம் அதிபர் என்ற பெருமையைப் பெற்றவர் இர்பான் அலி. இவர் 2020 ஆகஸ்டில் அதிபர் பொறுப்பை ஏற்றார். வெஸ்ட் கோஸ்ட் டெமார்ரா பகுதியில் 1980 ஏப்ரல் மாதம் பிறந்த இவர், இந்தோ-கயானிஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

2015-ல் போர்சுக்கல் பிரதமராக பொறுப்பேற்றவர் அன்டோனியா கோஸ்டா. இவர் 1961-ல் லிஸ்பனில் பிறந்தார். இவரது தாத்தா-பாட்டி கோவாவைச் சேர்ந்தவர்கள்.

மொரீஷியஸ் பிரதமராக 2017-ல் பொறுப்பேற்றவர் பிரவிந்த் ஜக்நாத். இவர் 1961-ல் மொரீஷியஸின் வாகோஸ்-பீனிக்ஸ் பகுதியில் இந்துக் குடும்பத்தில் பிறந்தார். மொரீஷியஸ் அதிபராக 2019-ல்பொறுப்பேற்ற பிரித்விராஜ் சிங் ரூபன் 1959-ல் இந்திய ஆர்ய சமாஜி இந்து குடும்பத்தில் குவாட்ரே போர்ன்ஸ் என்ற பகுதியில் பிறந்தார்.

சூரிநாம் நாட்டின் அதிரபராக 2020-ல்பதவியேற்ற சந்திரிகா பிரசாத் சன்டோகி,1959-ல் லெலிடார்ப் என்ற பகுதியில் இந்தோ-சூரிநாமிஸ் இந்துக் குடும்பத்தில் பிறந்தவர்.

கயானாவின் துணை அதிபராக 1999 முதல் 2011 வரை பதவி வகித்த பாரத் ஜக்தேவ், முந்தைய பிரிட்டிஷ் கயானா பகுதியிலுள்ள டெமார்ரா-மஹாய்கா பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த இந்து குடும்பத்தில் பிறந்தார். இவரது தாத்தா ராம் ஜியாவன், 1912-ல் உத்தரபிரதேசத்தில் இருந்து பிரிட்டிஷ் கயானாவுக்கு குடிபெயர்ந்தவர்.

அயர்லாந்து அரசின் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்தவர் லியா வராட்கர். 1979-ல் டப்ளினின் பிறந்த வராட்கரின் தந்தை மும்பையைச் சேர்ந்தவர். அதேபோல் சுமார் 12-க்கும் மேற்பட்ட நாடுகளில் 55 இந்திய வம்சாவளியினர் கேபினட் அமைச்சர் பதவி வகிக்கின்றனர். மேலும் 63 இந்திய வம்சாவளியினர் பல்வேறு நாடுகளின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாகவும், பெடரல் அவை உறுப்பினர்களாவும் உள்ளனர். 12 பேர் தூதர்களாக பணிபுரிகின்றனர்.

மொரீஷியஸ், ஃபிஜி, சிங்கப்பூர், சூரிநாம் ஆகிய 4 நாடுகளில் இந்திய வம்சாவளியினர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்துள்ளனர்.

ஃபிஜி, கயானா, சிங்கப்பூர், மொரீஷியஸ் ஆகிய 4 நாடுகளில் இந்திய வம்சாவளியினர் பலர் மத்திய வங்கி நிர்வாக தலைவர்களாகவும் இருந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் அதிபர் ஜோ பைடனின் மூத்த ஆலோசகர் நீரா டாண்டன் உள்ளிட்ட 112 இந்திய வம்சாவளியினர் உயர் பதவிகளில் உள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.